பாபநாசம் படத்திற்கு தடை! விநியோகஸ்தர் கூட்டமைப்பு முடிவு! கமல் ரசிகர்கள் அதிர்ச்சி!

என்னடா… இன்னும் காணோமே? என்று நினைத்துக் கொண்டிருந்தால், ஆரம்பிச்சுட்டாங்களே…

பொதுவாகவே கமல் படம் எதுவும் சுக பிரசவமாக இருந்ததில்லை. கத்தி புத்தி சித்தி மூன்றையும் பயன்படுத்திதான் தியேட்டருக்கு கொண்டு வர வேண்டியிருக்கிறது. இந்த நிலையில் இன்று கூடிய திரைப்பட விநியோகஸ்தர் கூட்டமைப்பு ஜுலை 3 ந் தேதி வரவிருக்கும் ‘பாபநாசம்’ படத்தை வெளியிட தடை விதித்திருக்கிறது. இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும், கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவால் திரையுலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படியொரு முடிவை அவர்கள் எடுக்க என்ன காரணமாம்? வேறொன்றுமில்லை. உத்தமவில்லன் படம் வெளியான நேரத்தில் பைனான்ஸ் பிரச்சனை எழுந்ததல்லவா? அப்போது தயாரிப்பாளர் லிங்குசாமியின் கடனை ஈடு செய்யும் விதத்தில், கமல் அவரது சம்பளத்தை விட்டுக் கொடுத்து முப்பது கோடியில் ஒரு படத்தை எடுத்துத் தருவதாக எழுத்துபூர்வமாக அறிவித்தார். கமல் சார்பாக அவரது சகோதரர்தான் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறார். இந்த படத்தையும் உடனே ஆரம்பித்து வெகு சீக்கிரத்தில் முடிப்பதாக ஏற்பாடு. ஆனால் உத்தமவில்லன் வெளியான பின்பு எல்லாருமே இந்த பிரச்சனையை மறந்துவிட்டார்கள். இப்படி பேசப்பட்டது, எழுதப்பட்டது எதுவுமே நடைபெறவில்லை.

கமல் சொன்னபடி அந்த படம் துவங்கப்பட்டு விரைவில் முடிந்தால், உத்தம வில்லன் படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை விநியோகஸ்தர்கள் ஈடு செய்ய முடியும். ஆனால் அதற்கு வழி கொடுக்காமல் கமல், ‘தூங்காவனம்’ என்ற வேறொரு படத்தை துவங்கிவிட்டார். இன்று நடந்த விநியோகஸ்தர் கூட்டமைப்பு கூட்டத்தில், உடனடியாக ஒப்பந்தப்படி கமல் ஒரு படத்தை துவங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இல்லையென்றால் கமலின் பாபநாசம் படத்திற்கு எந்த விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் ஒத்துழைப்பதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுக்கு கமல் தரப்பு என்ன ரீயாக்ஷன் செய்யப் போகிறதோ? அது இனிமேல்தான் தெரியவரும்!

Read previous post:
விஜய் பட பூஜை! ரஜினி வருவார்னு சொன்னாங்க… ஆனா?

விஜய் நடிக்கும் புதிய படத்தின் தொடக்க விழா இன்று ஈசிஆர் சாலையிலிருக்கும் ஷுட்டிங் பங்களா ஒன்றில் ஏக அமர்க்களமாக நடந்தது. இந்த படத்துவக்க விழாவுக்கு ரஜினி வருவார்...

Close