பொறுத்தது போதும்… பொங்கியெழு மனோகரா!

கலைஞர் எழுதிய வசனம்தான் ‘ பொறுத்தது போதும்… பொங்கியெழு மனோகரா! ’ இதில் செகன்ட் பார்ட்டை மட்டும் தனது படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கிறார் ரமேஷ் ரங்கசாமி. எஸ்.ஏ.சந்திரசேகரிடம் தொழில் கற்றுக் கொண்டவர். ‘நீங்க கலைஞர் ரசிகரா?’ என்ற கேள்வியோடு உட்கார்ந்தால், ‘இந்த வசனத்தை ரசிக்காத ஆளு யாராவது இருந்தா காட்டுங்க’ என்கிறார் ரமேஷ்.

‘நான் பத்து வருஷமா படம் பண்ற முயற்சியில் இருந்தேன். ஒவ்வொரு முறையும் தயாரிப்பாளரை பார்த்து கதை சொல்வேன். அவங்க ‘போயிட்டு வாங்க, நெக்ஸ்ட் டைம் பார்க்கலாம்’னு சொல்வாங்க. அப்பல்லாம் துவள்ற பழக்கம் நமக்கு இல்ல. ‘பொங்கியெழு மனோகரா’ன்னு எனக்கு நானே தட்டிக் கொடுத்துப்பேன். அப்புறம் என் படத்திற்கு அதையே தலைப்பா வச்சுட்டேன்’ என்றார்.

சில இயக்குனர்களிடம் பேசும்போது மட்டும்தான் மண்டைக்குள் பல்லி குறி சொல்லும்… இவரு நல்லா வருவாருன்னு. ரமேஷிடமும் அந்த வெளிச்சம் அடித்தது.

90 களில் நடக்கிற கதை சார் நம்மளுது. அதுக்காக பழைய வாசனையுள்ள கிராமத்தை தேடி அலைஞ்சேன். அந்த நேரத்தில்தான் சத்தியமங்கலம் பக்கத்துல ஒரு கிராமம் கிடைச்சுது. போய் முழு படத்தையும் அங்கேயே இருந்து முடிச்சுட்டு வந்துட்டோம் என்ற ரமேஷுக்கு பாட்டு பிரமாதமாக வருகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளரிடம் கதை சொல்றதுக்கு முன்னாடி பாடிக் காட்டுனேன். அதுக்கப்புறம் அவர் என் கதையை கூட கேட்கல. படம் பண்றோம்னு சொல்லிட்டார் என்றவர், மேசையில் தாளம் தட்டி பாட ஆரம்பிக்கிறார். அற்புதமான அம்மா பாட்டு அது. அதுவும் எய்டீஸ் ராஜா சார் ஸ்டைலில்!

இவர் பாடுவார் என்கிற விஷயம் படப்பிடிப்பு நடத்தப்போன ஊர் மக்களுக்கும் தெரிந்ததுதான் வேடிக்கை. நல்லா ஷுட்டிங் போயிட்டு இருக்கும். திடீர்னு ஊர் பெரியவர் ஒருத்தர் வந்து, தம்பி… அந்த பாட்டு ஒண்ணு பாடுனீங்களே, எங்கே அதை இன்னொரு தடவ பாடுங்க கேட்போம்பாரு. ஷுட்டிங்கை அப்படியே நிறுத்திட்டு பாடிக் காட்டுவேன். சந்தோஷமா போறவர், அடுத்த ஒரு மணி நேரத்தில் இன்னும் நாலு பேரோட வருவார். தம்பி… இவங்க கேட்கலையாம். ஒரு தடவ பாடுங்களேம்பாரு. மறுபடியும் பாடுவேன். இப்படி வெள்ளந்தி ஜனங்களோட பாடி பாடியே அந்த ஊர்ல ஷுட்டிங்கை எடுத்து முடிச்சேன். இப்போ அந்த ஊர்ல போய் பாருங்க. அவங்கவங்க என் பாட்டைதான் பாடிட்டு இருப்பாங்க என்றார்.

இர்பான் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அர்ச்சனா, அருந்ததி நாயர் என்று இரண்டு இளம் ஹீரோயின்கள் அறிமுகமாகிறார்களாம். தியேட்டருக்கு வர்றவங்க நல்லா மனம் விட்டு சிரிக்கிற மாதிரி எடுத்துருக்கேன். சிரிப்பாங்க… என்கிறார் ரமேஷ் ரங்கசாமி.

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
கல்லறைத் தோட்டத்தில் ஒரு கம்ப்யூட்டர் செடி!

எனது முன்னாள் முதலாளி ஆன்ட்டோபீட்டர் மறைந்து இன்றோடு இரண்டாண்டுகள் ஓடிவிட்டன. அவரது மறைவின்போது நான் எழுதிய கட்டுரையை இங்கே மீள் பதிவு செய்திருக்கிறேன். இன்று அவர் இல்லை....

Close