ஜி.வி.பிரகாஷுக்கு எதிராக திரளும் தனியார் பள்ளிகள்?
எப்படியாவது ஜெயிச்சாகணும்! ஜி.வி.பிரகாஷின் இந்த கொள்கையால் ‘உள்ளே வெளியே’ பார்த்திபன்களும், ‘உவ்வே உவ்வே’ டயலாக்குகளும் கோடம்பாக்கத்தில் மீண்டும் என்ட்ரி. தன் மோதிர விரலால் அதற்கு ரிப்பன் வெட்டிய ஜி.வி.பிரகாஷின் முதல் படைப்பு த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா. முழு கல்லாவையும் கட்டிய த்ரிஷாவால், இப்போது கலெக்ஷன் ஹீரோவாகவும் ஆகிவிட்டார் ஜி.வி.பிரகாஷ்.
ஏ.ஆர்.ரஹ்மான் வீட்டிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கும் ஒரு நபருக்கு, அவரது பெயரை காப்பாற்ற வேண்டுமே என்ற அக்கறை துளியாவது இருந்திருந்தால் இதுபோன்ற படங்களில் நடித்திருப்பாரா என்றெல்லாம் சமூகம் சலித்துக் கொண்டது. அது காதில் விழுந்ததோ என்னவோ? சுதாரித்துக் கொண்டார் ஜி.வி. தனது பாவத்திற்கெல்லாம் பரிகாரம் தேடுவது போல ஒரு படத்தில் நடித்திருக்கிறார். தனியார் பள்ளிகளின் பகல் கொள்ளையை பற்றி எடுக்கப்பட்டிருக்கும் பென்சில், ஜிவி ஹீரோவாக நடித்த முதல் படம். பிளாட்பாரத்திற்கு பல வருட தாமதத்தோடு வந்து சேர்ந்திருக்கிறது. லேட்டாக வந்தாலும், ஜி.வி.பிரகாஷின் குடும்ப பெருமைக்கு குந்தகம் விளைவிக்காத படமாக இருக்குமாம்.
தனியார் பள்ளியில் படிக்கும் ஒரு மாணவன், பள்ளி வளாகத்துக்குள்ளேயே மர்மமான முறையில் இறந்து போகிறான். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டுவிடும் என்று நினைக்கும் நிர்வாகம், போலீஸுக்கு காசு கொடுத்து மூடி மறைத்துவிடுகிறது. இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம்தான் ‘பென்சில்’. இதுமட்டுமல்லாது, நீச்சல் குளத்துக்குள் விழுந்து மாணவன் இறந்தது, பேருந்து ஓட்டைக்குள் தவறி விழுந்து மாணவி இறந்தது, பள்ளிகளில் மாணவர்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பது போன்ற மாணவர்களுக்கு அச்சுறுத்தலாக அமையும் பல்வேறு விஷயங்கள் இந்தப் படத்தில் வெளிப்படையாகவே காட்டப்பட்டிருக்கின்றன. அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கும் விஷயம் இந்தப் படத்தில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்கள் எல்லாமே தனியார் பள்ளிகளில் தான் நடைபெறுகின்றன. அரசுப் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதில்லை என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் குட்டை உடைக்கிறது இந்தப் படம்.
இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட சில மெட்ரிகுலேஷன் பள்ளிகள், அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளிகளையும் ஒன்றுதிரட்டி படத்திற்குத் தடைவிதிக்க ஏற்பாடுகளைச் செய்து வருவதாக தகவல்.
சொன்ன தேதிக்கு வருமா பென்சில்? டவுட்டுதான் தங்கராசு….