நடிகர் சங்கத்தில் கலகம் ஸ்டார்ட்? கலைஞர் சந்திப்பும், அதிமுக வினர் கோபமும்!

மூச்சுக்கு நானூறு தடவை “சங்கத்துல அரசியல் வராது” என்றெல்லாம் விஷால் முழங்கினாலும், ‘ஸாரி மை பிரதர்’ ஆக்குவார்கள் போலிருக்கிறது அவரை. வேணாம்னு சொன்னாலும் சரின்னு போகிற குணம் அரசியலுக்கு இருந்தேயில்லை. இப்போதும் அப்படிதான். ஆனால் இதில் நீதி இருக்கிறதா, நியாயம் இருக்கிறதா? வம்பு இருக்கிறதா? வழக்கு இருக்கிறதா? என்றெல்லாம் அலச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது மீடியா.

நடிகர் சங்கத் தேர்தலில் வென்ற விஷால் அணி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நேரம் கேட்டு காத்திருந்தது. முதல்வரை சந்திப்பதற்கு முன் யாரை சந்தித்து ஆசி பெறும் நோக்கமும் அவர்களுக்கு இருந்ததாக தெரியவில்லை. அதுமட்டுமல்ல, இந்த தேர்தலில் முதல்வர் யார் பக்கமும் சேராமல் நடுநிலையாக நின்றதுதான் இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணம் என்பதையும் நன்றாக அறிந்து வைத்திருக்கிறது விஷால் அணி.

நினைத்த மாதிரியே முதல்வரிடமிருந்து அழைப்பு வந்தது., சென்றார்கள். சிரித்தார்கள். போட்டோ எடுத்தார்கள். அப்படியே ஒரு கோரிக்கையும் வைத்தார்கள். “அம்மா… நடிகர் சங்கத்தின் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு நீங்க அவசியம் வரணும்”. இதுதான் இவர்களின் அழைப்பு. அவரும் சிரித்தபடியே, “எப்போன்னு சொல்லுங்க. வர்றேன்”என்று கூறிவிட, ஏக சந்தோஷமானது பொறுப்பாளர்களின் மனசு. விஷயம் அதோடு போயிருந்தால் ஓ.கே.

முன்னாள் முதல்வர். கலைத்துறையின் மூத்தவர். சாதனையாளர் என்று பல கிரீடங்களை தாங்கியிருக்கும் திமுக தலைவர் கலைஞரையும் சந்திக்கப் போனார்கள். அது கூட பிரச்சனையில்லையாம் இப்போது. அவரை சந்தித்துவிட்டு வெளியே வந்த நடிகர் சங்கத் தலைவர் நாசர், “நடிகர் சங்கத்தின் அடிக்கல் நாட்டுவிழாவுக்கு கலைஞரை அழைப்போம்” என்று கூறிவிட, ஆரம்பித்தது பகடை ஆட்டம். செம டென்ஷன் ஆகிவிட்டாராம் ஜே.கே.ரித்தீஷ். காரணம், இந்த தேர்தலில் விஷால் அணி வென்றதில் பெரும் பங்கு ரித்தீஷுக்கு உண்டு அல்லவா? உடனே தன் தளபதியும் இன்னொரு நடிகருமான விஜய் கார்த்தியை விட்டு தனது அதிருப்தியை தெரிவிக்க வைத்ததாக தகவல். ரித்திஷுடன் அதிமுக வை சார்ந்த இன்னபிற நடிகர்களும் சேர்ந்து கொண்டார்களாம்.

நாசர், பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோரிடம் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினார்களாம். எந்த பதிலை சொன்னாலும் அது விவகாரத்தில் முடியும் என்பதால், விஷால் மொபைல் போனை ஆஃப் பண்ணிவிட்டு அமைதியாகிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

எந்த நேரத்திலும் கலகம் வெடிக்கலாம் என்ற நிலைமை! அடிக்கல் நாட்டுவாங்களா, இல்ல… அந்த கல்லை எடுத்து ஆளுக்கு ஆள் வீசிக் கொள்வார்களா? எல்லாம் வல்ல சங்கரதாஸ் சுவாமிகளே சரணம்…

Read previous post:
அசிஸ்டென்ட் டைரக்டருக்கு அறை… மீனாட்சிக்கு அடி உதை! ஷுட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பு

‘கருப்பசாமி குத்தகைதாரர்’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமகமானவர் மீனாட்சி! அதற்கப்புறம் அவர் நடித்த எந்த படமும் போஸ்டர் காசை கூட வசூலிக்க முடியாதளவுக்கு நெருக்கடிக்கு ஆளானதால், மெதுவாக...

Close