மிர்ச்சி சிவாவின் கனவு! மிதித்துத் தள்ளிய சந்தானம்?
உழவு மாட்டை வண்டியில பூட்டுன கதையா, சுற்றி சுற்றி வருது மிர்ச்சி சிவாவின் மார்க்கெட்! அது எப்ப மேலேறி, அதுமேலே எப்ப நாம ஏறுவது என்கிற தவிப்போடவே திரிகிறார் அவரும். ஒரு எக்ஸ்பிரஷனும் வராத தன் முகத்தை, ஜனங்கள் கிண்டல் அடித்துவிடக் கூடாது என்பதற்காக எல்லாருக்கும் முந்தி தன்னையே கிண்டல் அடித்துக் கொண்ட அவரது ட்ரிக் இங்கு நன்றாகவே வேலை செய்ய ஆரம்பித்தது. தமிழ்சினிமாவை சகட்டு மேனிக்கு கலாய்த்து தள்ளிய அவரை நம்பி நாலைந்து படங்கள் வெளிவந்தன. அதில் சிலவற்றிற்கு கல்லா. சிலவற்றிற்கு குல்லா! அதற்கப்புறம் தட்டுத்தடுமாறி ஓடிக் கொண்டிருந்த அவரது மார்க்கெட்டில் யாரோ ராக்கெட்டை ஏவி நிலை குலைய வைத்ததன் பயன், ஐயா இப்போ முழு நேரமும் வீட்ல!
இந்த நேரத்தில்தான் விஜய் தொலைக்காட்சியில் சந்தானத்தை வைத்து லொள்ளு சபா என்ற சூப்பர் டூப்பர் ஹிட் நிகழ்ச்சியை நடத்தி வந்த ராம்பாலா சிவாவை சந்தித்து உங்களுக்காக ஒரு கதை வச்சுருக்கேன். நடிங்க என்றாராம். சிரிப்புக்கு முழு அத்தாரிடியான ஒரு நபர், குந்துன இடத்துக்கே வந்து குல்பி ஐஸ் கொடுக்கும்போது வேணாம்னு சொல்லிட முடியுமா? வாங்கோ…வாங்கோ… உங்க கருணை என்னோட பெருமை என்றாராம் சிவா. எல்லாம் நல்லபடியாகதான் போய் கொண்டிருந்தது. அங்குதான் விதி என்ட்ரி.
சந்தானம் சினிமாவுக்கு வர பெரும் காரணமாக இருந்ததே அந்த லொள்ளு சபாதான். யார் யாரையோ உச்சாணிக் கொம்பில் கொண்டுபோய் வச்ச நீங்க, இவரை கண்டுக்காம விட்டுட்டா எதிர்காலம் உங்க மேல பழிபோட்டே கொன்னுடும். நல்லா யோசிங்க. இந்த வாய்ப்பை நழுவ விடாதீங்க என்று அவருக்கு சிலர் ஓத, அதுவும் சரிதான் என்ற முடிவுக்கு வந்தாராம் அவர். உடனடியாக ராம்பாலாவை தொடர்பு கொண்டு, அந்த கதையில் நான் நடிக்கிறேன் என்று கூற, மிர்ச்சி சிவாவின் தலைக்கு 300 கிலோவில் இடி!
இவரா? அவரா? என்ற குழப்பத்திற்கே இடம் இல்லை. சந்தானம்தான்… சந்தானம்தான்… என்று மனசுக்குள் அலாரம் அடிக்க, ஓடியே வந்துவிட்டாராம் ராம்பாலா!
மிர்ச்சின்னு பேரு வச்சுகிட்டா வாழ்க்கை இனிக்கவா செய்யும்? அல்வா சிவான்னு மாத்தி பாருங்களேன் சாரே…