டப்பிங் பேசாமல் இழுத்தடிப்பு? சித்தார்த் செய்கையால் தயாரிப்பாளர் அதிருப்தி…
ஒருவர் காலை மற்றவர் இழுப்பதைதான் நாகரீகமான வார்த்தையில் ‘அரசியல்’ என்கிறார்கள் போலும்! பாலிட்டிக்ஸ் பண்றான்ப்பா… என்கிற வார்த்தையை இப்போதெல்லாம் சரளமாக பல்வேறு அலுவலகங்களில் கூட கேட்க முடிகிறது. இப்படி பாலிட்டிக்ஸ் இல்லாத துறையே இல்லை என்றான பின்பு, சினிமாக்காரர்கள் மட்டும் ‘எனக்கெதுக்கு இதெல்லாம்’ என்று இருந்துவிடுவார்களா?
இன்னொரு ஹீரோவுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்பை தட்டிப்பறிப்பது. சந்தடி சாக்கில் எதிராளியை பற்றி கிசுகிசுவை கிளப்பிவிடுவது என்று கையில் கடப்பாரையோடு திரிந்து எதிராளிக்கு குழி வெட்டிக் கொண்டேயிருப்பார்கள். ஆனால், தனது படத்திற்கு தானே குழி வெட்டுகிற அதிசயத்தை ஒரு ஹீரோவே செய்கிறார் என்பதுதான் ஷாக். நடிகர் சித்தார்த் நடித்த இரண்டு தமிழ் படங்கள் கிட்டதட்ட ரிலீசுக்கு தயார். இதில் காவியத் தலைவன் என்ற படம்தான் சித்தார்த்தின் ஃபேவரைட்டாம். மளமளவென இந்த படம் வெளிவருவதற்கான வேலைகளில் அக்கறையாக இருக்கிறார் அவர்.
இவரது இன்னொரு படமான ‘எனக்குள் ஒருவன்’ படப்பிடிப்பும் முடிந்து போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் ஆரம்பம் ஆகிவிட்டன. டப்பிங் பேசுவதற்காக சித்தார்த்தை அழைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் அவர் இதோ அதோ என்று அந்த நல்ல காரியத்தை தள்ளிப் போட்டுக் கொண்டேயிருக்கிறார். ஏன்? இந்த படத்தின் டப்பிங் வேலையை பேசி முடித்துவிட்டால், காவிய தலைவனுக்கு முன் ‘எனக்குள் ஒருவன்’ வெளிவந்துவிடும். அது தனது கேரியருக்கு நல்லதல்ல என்பதால்தானாம். அதற்காக எனக்குள் ஒருவன் சுமார் ரகம் அல்ல என்பதையும் சொல்லியாக வேண்டும்.
முதலில் ‘காவியத்தலைவன்’ வந்தால், அதில் ஏ.ஆர்.ரஹ்மான் இருக்கிறார். வசந்தபாலன் படம், எழுத்து ராட்சசன் ஜெயமோகன் வசனம் எழுதியிருக்கிறார். இப்படி பல்வேறு ப்ளஸ்கள் இருக்கிறதே…! இதெல்லாம் சேர்ந்தால் தனது கேரியருக்குதானே வளர்ச்சி என்றெல்லாம் நினைக்கிறாராம். இவருக்கேற்றார் போல பின்னணி இசையமைப்பில் சற்றே சுணக்கம் காட்டி வருகிறாராம் ரஹ்மான்.
எத்தனை தாமதம் ஏற்பட்டாலும் முதலில் காவிய தலைவன் வரட்டும் என்கிறாராம் சித்தார்த். இதில் ரொம்பவே அப்செட் ஆகியிருக்கிறாராம் எனக்குள் ஒருவன் தயாரிப்பாளர்.