பாடகர் சூர்யா – அவரே விவரித்த அனுபவம்

பொழுதுபோக்கு நாடும் தமிழர்களுக்கு… ஆகஸ்ட் ஃபெஸ்டிவெல் ‘அஞ்சான்’தான்!

மார்க்கெட்டிலிருக்கும் மெகா மெகா ஹீரோ, இயக்குனர், தயாரிப்பு நிறுவனம் என்று பாட்டி சுட்ட வடையிலேயே பெரிய வடை இதுதான்! கதை எப்படியோ? மேக்கிங் மேக்கிங் மேக்கிங்… என்று மிரட்டியிருந்தார்கள். இன்று சத்யம் வளாகத்தில் திரையிடப்பட்ட ட்ரெய்லர், மற்றும் இரண்டு பாடல்கள் எல்லாமே அமர்க்களம்!

ஹீரோ சூர்யாவை திரையில் பார்த்தால், வேறு ஹீரோவின் ரசிகர்களே கூட விசிலடிக்கக் கூடும். அப்படியொரு அசத்தல் ஹேர் ஸ்டைல், அழகான தாடி என்று லுக்கிலும் ஸ்டைலிலும் வேறொரு பரிமாணத்திலிருந்தார். இனி ஹேர் ஸ்டைல் நிலையங்களில் எல்லாம் குட்டி குட்டி சூர்யாக்களாக வழிந்து நிறைந்தால் கூட ஆச்சர்யமில்லை. அஞ்சானில் ஒரு பாடலை சூர்யாவே பாடியிருக்கிறார். இசையமைப்பாளர் யுவன்சங்கர்ராஜா, பாடலை எழுதிய நா.முத்துக்குமார், இயக்குனர் லிங்குசாமி ஆகியோர் சுற்றி நிற்க, தான் பாட்டுப் பாடிய அனுபவத்தை வெட்கம் வழிய விவரித்தார் சூர்யா.

அந்த பாடலை யுவன் பாடி கம்போஸ் பண்ணி எடுத்துட்டு வந்து காமிச்சாரு லிங்குசாமி. என்னவோ ஒண்ணு மிஸ் ஆகுறாப்ல இருந்துச்சு. அந்த குரல் வேறயா இருந்தா நல்லாயிருக்குமே என்றேன். சரி.. நீங்களே பாடிடுங்களேன் என்றார் லிங்குசாமி. நானா? என்று திகைப்பதற்குள் நான்தான் பாடணும் என்று முடிவே செஞ்சுட்டாங்க. ஏ.ஆர்.ரஹ்மான் சார் ஸ்டுடியோவுலதான் இந்த பாடலை பாடினேன். எனக்கு தொண்டை சரியில்ல. இன்னொரு நாளைக்கு பாட சொல்வாருன்னுதான் நினைச்சேன். சும்மா ஒரு ட்ரையல் பார்க்கலாம்னு பாட சொன்னார். பாடி முடிச்சதும் கிளம்ப சொல்லிட்டார். நானும் பாடுவதற்கு இன்னொரு நாள் கூப்பிடுவாங்கன்னு பார்த்தா, ‘டாட்’ போயிருச்சுன்னுட்டாங்க. முழு பாடலா உருவாகி வந்தப்போ, அது நான் பாடியதுதானான்னு எனக்கே பிரமிப்பா இருந்திச்சு என்றார் சூர்யா.

இன்னொரு பாடல் உருவான கதையை லிங்குசாமி விவரிக்க, ஒரு மர்ம நாவல் போலவே விறுவிறுப்பு. ஐதராபாத்ல ஷுட்டிங். சூர்யா சாரை வரச்சொல்லிட்டேன். யூனிட் மொத்தமும் போய் இறங்கியாச்சு. ஆனால் எடுக்க வேண்டிய பாடலில் எனக்கு திருப்தியே வரல. என்னவோ இன்னும் இன்னும் வேணும்னு தோணிகிட்டேயிருந்திச்சு. ஏற்கனவே மூன்று முறை ட்யூன் போட்டு உருவான பாட்டு அது. இருந்தாலும் இன்னும் ஒரு ட்யூன் போட்டு பார்த்துடலாம்னு தோணுச்சு. நான் மட்டும் கிளம்பி சென்னைக்கு வந்திட்டேன். கிளம்பும்போது சூர்யா சார் கேட்டார், இது சரியா வருமான்னு. கடைசி நிமிஷத்துல பல அதிசயங்கள் நடந்திருக்கு இங்க. இது வொர்க்கவுட் ஆவும்னு சொன்னேன்.

யுவனை பதட்டப்படாம உட்கார வச்சு, அவங்க அப்பா ஐந்து நிமிஷத்துல ஐந்து பாட்டு போட்டுக் கொடுக்கிற விஷயத்தையெல்லாம் பேசி இன்னும் ஒரு ட்யூன் போட்டு பார்த்துடலாம்னு கேட்டேன். விவேகாவை வரவழைச்சோம். அதற்கப்புறம் நான் நினைச்ச மாதிரியே ஒரு ட்யூன் வந்திச்சு. உடனே பாடல் எழுதிக் கொடுத்தார் விவேகா. அதை எடுத்துகிட்டு உடனே பறந்து போய் மறுநாள் ஷுட் பண்ணினோம் என்றார்.

நாளை 23 ந் தேதி சூர்யாவுக்கு பிறந்தநாள். முதல் நாளான இன்றே ஒரு பிரமாண்ட கேக்கை மேடைக்கு வரவழைத்து வெட்டி கொண்டாடியது அஞ்சான் டீம். அப்படியே வெற்றிக்கான கேக்காகவும் கூட எடுத்துக் கொள்ளலாம் போலிருக்கிறது அறிகுறிகளை வைத்து பார்க்கும்போது!

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சிவகார்த்திகேயன் படமா? அப்படின்னா சரி! -ஏ.ஆர்.ரஹ்மான் பதிலால் குஷ்பு மகிழ்ச்சி

குஷ்பு திமுக விலிருந்து விலகியதே அஜீத்தால்தான் என்றொரு ஹேஷ்யம் நிலவிக் கொண்டிருக்கிறது இங்கே. அதாவது அஜீத்தின் கால்ஷீட்டை குஷ்பு கேட்டதாகவும், அவர் திமுக வில் இருப்பதால் அஜீத்...

Close