ரஜினி சார் கை எம்மேல பட்ருச்சு, அப்புறம்…! சுத்தி வளைச்சு ஒரு சேதி சொல்லும் டான்ஸ் மாஸ்டர்…
பல படங்களில் சென்ட்டர் பிகராக நின்று ஆடும் கொழுக் மொழுக் பையன்தான் ஸ்ரீதர். நடன இயக்குனர் என்பதால் ஸ்ரீதர் மாஸ்டர் என்கிறது திரையுலகம். இதுவரை 200 படங்களுக்கு மேல் நடன அமைப்பு செய்திருந்தாலும், நடுநடுவே எட்டிப் பார்க்கும் ஹீரோ ஆசை இவரை கபளீகரம் செய்துவிட்டது. பிரபல விநியோகஸ்தர் தணிகைவேல் வெளியிவிடவிருக்கும் ‘போக்கிரி மன்னன்’ படத்தில் ஸ்ரீதர்தான் ஹீரோ.
‘மனசுக்குள்ள எனக்கு ஹீரோவாகணும்னு ஆசை இருந்திச்சு. நல்ல சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தேன். அந்த நேரத்தில்தான் டைரக்டர் ராகவ் மாதேஷ் அவர் இயக்குகிற படத்திற்கு நடனம் அமைக்க கூப்பிட்டார். அதுவரைக்கும் ஹீரோ யாருன்னு கூட அவங்க முடிவு பண்ணல. என்னை பார்த்ததும் நீங்களே ஹீரோவா நடிக்கிறீங்களா? என்று அவர் கேட்டார். நானும் சரின்னு சொல்லிட்டேன். என்னோட ஸ்பூர்த்தி ஜோடியா நடிக்கிறாங்க’ என்றார் ஸ்ரீதர்.
அதற்கப்புறம் அவர் சொன்ன விஷயம்தான் உற்று கவனிக்கப்பட வேண்டிய விஷயம். ‘ரஜினியுடன் ‘மாத்தாடு மாத்தாடு மல்லிகே…’ பாடலுக்கு குரூப்பில் ஆடிக் கொண்டிருந்தாராம். அப்போது ரஜினிக்கு அருகில் இவர் ஆடிக் கொண்டிருந்தாராம். சட்டென்று ரஜினியின் கைகள் பலமாக இவர் தலையில் பட்டுவிட்டதாம். சட்டென்று இறுக்கமாக மண்டையில் வைத்த கையை எடுக்கவே இல்லையாம் ரஜினி. ஸாரி கேட்பாருன்னு நினைச்சா இன்னும் அழுத்துறாரே… என்று இவர் நினைத்துக் கொண்டிருக்க, உன்னை நான் ஆசிர்வதிக்கிறேன். நீ நல்லாயிருப்பே… என்றாராம் கண்களை மூடியபடி. அப்படியே எனக்கு சிலிர்த்துப் போச்சு. அவர் வார்த்தைகளில் ஒரு மந்திரம் இருந்திச்சு. அதற்கப்புறம் நான் மளமளன்னு தொழில்ல வளர்ந்து இன்னைக்கு இந்த இடத்துல நிக்கிறேன்’ என்றார் மெய்சிலிர்த்தபடியே.
படத்தின் கதை என்ன தெரியுமா? குடிக்காதே… என்பதுதான். தியாகி சசிபெருமாளுக்கு டெடிகேட் பண்ணுவீங்களா?