மீண்டும் பேட்ச் அப் ஆனது சிம்பு-ஹன்சிகா ஜோடி!

கிளை விட்டு கிளை தாவும் குரங்கை விட மோசமானது லவ்! சேச்சே… உன் சகவாசமே வேணாம் என்று நேற்று முறைத்து, நீயின்றி நானில்லை, உன் நிழலின்றி சோறில்லை என்று இன்று அணைத்துக் கொள்ளும் விந்தையான மனம் கொண்டவர்கள் காதலர்களாகதான் இருக்க முடியும். இந்த காதல் சிம்பு ஹன்சிகாவை மட்டும் “அப்படியே இருந்துட்டு போங்க” என்று விட்டுவிடுமா என்ன?

இருவரை பற்றியும் முன்னுரை தேவையில்லை. இருவர் காதல் பற்றியும் கூட முன்னுரை தேவையில்லை. ஆனால் சேரும் போதே புட்டுக் கொள்ளும் என்று நம்பிய ஓராயிரம் சினிமா காதலில் சிம்பு ஹன்சிகா காதலுக்கு பெரிய இடம் இருந்தது. வானத்துல பறக்குறேன்… வவ்வாலை புடிக்குறேன் என்று ஹன்சிகாவுடன் காதல் ஏற்பட்டதும் பினாத்தி தள்ளினார் சிம்பு. எல்லாம் கொஞ்ச நாளைக்குதான். “எங்க லவ் புட்டுக்குச்சு” என்று அவர்களே பேஸ்புக் மற்றும் ட்விட்டர்களில் தெரிவித்துவிட்டு ஆளுக்கொரு பக்கம் ஒதுங்கிவிட்டார்கள். ஏன் பிரிந்தார்கள் என்பதை ஸ்காட்லாந்து போலீஸ் வசம் ஒப்படைத்துவிட்டு குப்புறடித்து படுத்துக் கொண்டது கோடம்பாக்கம்.

“நான் சிவ பக்தனாகிட்டேன். அவன் நினைச்சா போனதெல்லாம் வரும். அவன் நினைக்கலேன்னா இருக்கறதும் போயிரும்” என்கிற அளவுக்கு சிந்தாந்தம் பேசி திரிந்தார் சிம்பு. இந்த நிலையில்தான் அந்த பொல்லாத தகவல் புளியங்கொட்டை சைசுக்கு முன்னால் வந்து நிற்கிறது. என்னவாம்? வாலு படம் முடிந்து கடைசியாக ஒரு பாடல் காட்சி எடுக்க வேண்டியிருந்தது. அதை படம் அவுட் எடுக்கிற சமயத்தில்தான் எடுத்து சேர்த்தார்கள். இந்த பாடல் காட்சிக்கு தன்னால் வந்து நடித்து தர முடியாது என்று அம்மாவை விட்டு ஒப்பித்துவிட்டு அமைதியாக இருந்துவிட்டார் ஹன்சிகா. எப்படியோ… அவரை மீண்டும் இழுத்து வந்து நடிக்க வைத்தார்கள்.

அன்றைய தினம் ஒழுங்காக படப்பிடிப்பில் இருந்து நடித்துக் கொடுத்தார்களாம் இருவரும். மறுநாள் ஷூட்டிங் வழக்கம் போல ஆரம்பித்ததாம். இருவரும் கூட வந்தார்கள். திடீரென்று காரை எடுத்துக் கொண்டு கிளம்பிய சிம்பு, கூடவே ஹன்சிகாவையும் அழைத்துக் கொண்டு கிளம்பினாராம். அவ்வளவுதான்…. போனவர்கள் மறுநாள்தான் ஸ்பாட்டுக்கு வந்தார்களாம். மோடி மஸ்தான் மோதிரத்தை மறைத்ததை போல, திடீரென மறைந்த அவ்விருவரும் இடைபட்ட நேரத்தில் எந்த கடையில் புரோட்டாவை பிய்த்து பிய்த்து தின்றார்கள் என்பது குறித்துதான் வாலு ரிலீஸ் ஆகி இத்தனை நாள் ஆன பிறகும் மெல்லுகிறது தொழிலாளர் வர்கம்.

வந்தமா? வேலைய பார்த்தமா? பேட்டாவை வாங்குனோமான்னு இல்லாம, இது என்னய்யா வடக்கச்சி சுவாமிநாதன் மாதிரி வரலாறு சொல்லிகிட்டு?

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இந்த படத்தின் முதல் ரசிகர் லிங்குசாமிதான்! ஜிகினா டைரக்டர் பெருமிதம்

ஜிகினா திரைப்படத்தின் இயக்குனர் ரவி நந்தா பெரியசாமி. அவர் தன் படத்தை பற்றி கூறும்போது, 'இந்தக் கதையைக் கேட்ட மாத்திரத்திலே படம் எடுக்கலாம் என உத்திரவாதம் அளித்ததோடு...

Close