இருநூறு ரூபாய் இரக்கமில்லா ஹீரோ உலகத்துல இப்படியும்தான் நடக்குது

கடைய திறந்ததும் கழுதைய கும்பிடுற வழக்கம் அநேக வியாபார ஸ்தலங்களில் இருக்கு! கும்பிட்டால் கல்லா ரொம்பிவிடும் என்பது நம்பிக்கை. ஆனால் அதெல்லாம் நிஜக் கழுதையா இருக்காது. படக் கழுதைதான்! ஒரே ஒரு பத்தியும் அதை பத்த வைக்கிற தீக்குச்சியுமா முடிஞ்சுரும் செலவு. நிஜக்கழுதைன்னா அது முடியாதே? அந்த படத்திலிருக்கும் கழுதையும் ‘என்னை பார் யோகம் வரும்’ என்று சொல்லிக் கொண்டே இருக்கிறது. இப்படி மேள தாளத்தோடு கழுதையின் இமேஜை வளர்க்கிற ஊர்லதான், ‘கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?’ என்று அதன் மூக்கின் மேல் சந்தேகத்தை வைக்கிறது ஊர். அந்த சந்தேகம் தீர்கிற வரைக்கும் அந்த கற்பூர ‘வில்லை’, கழுதைக்கு ‘தொல்லை’தான்!

இருந்தாலும் விடாப்பிடியாக அந்த கழுதை குறித்து கதையளக்கும் போதெல்லாம் ‘வாசனை தெரியுமா? வாசனை தெரியுமா?’ என்று டீஸ் பண்ணிக் கொண்டேயிருக்கிறது உலகம். ஐயோ பாவம். அதற்கு வாசனையும் தெரியப்போவதில்லை. அவர் புதுசாக ஆரம்பித்திருக்கும் கட்சியையும் தெரியப் போவதில்லை.

இப்போது ஏன் கழுதையை பற்றிய நீண்ட ஆய்வு? விஷயமில்லாமலா? இந்த கழுதை சென்ட்டிமென்ட் ஒரு வளரும் ஹீரோவிடம் இருப்பதுதான் ஒரே தையத்தக்கா சிரிப்பு. ‘இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேணாம்யா… மேக்கப் பாக்சுக்குள்ளே வச்சுக்கோ, வெளிய தெரிஞ்சா அதையே பெரிய நியூஸ்சா எழுதி மானத்தை வாங்கிருவானுங்க’ என்று ரகசியமாக கழுதையை வணங்குகிறார் அந்த ஹீரோ. மேக்கப் போடும்போது அந்த கழுதைக்கும் ஒரு வணக்கம் போட்டுவிட்டுதான் தொழிலையே துவங்குகிறார் அவர். அந்த களவாணியை பற்றி அதிகம் விவாதிக்க தேவையில்லை. ஏனென்றால் இந்த கட்டுரையில் அவரது பங்கு இந்த மூன்றாவது பாராவோடு முடிந்துவிட்டது.

‘ஓரிடம்தனிலே நிலையில்லாதுலகினிலே உருண்டோடிடும் பணம் காசெனும் உருவமான பொருளே’ன்னு சினிமாவுல பாட்டு எழுதுன புண்ணியவானுக்கு எவ்ளோ துட்டு கொடுத்தாங்களோ, தெரியாது. ஆனால் எல்லா காலத்திலும் சத்தியமும் ஜீவனுமாயிருப்பது அந்த வரிகள் மட்டும்தான். இப்போதும் கோடம்பாக்கத்திலும் சினிமா பத்திரிகையாளர்கள் மத்தியிலும் கிசுகிசுக்கப்படும் அந்த சம்பவம் கதையல்ல, நிஜம்!

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வந்து கொண்டிருந்த ஒரு வார இதழில் பணியாற்றிக் கொண்டிருந்தார் பத்மராஜன். ‘இந்த நடிகைக்கும் அந்த நடிகருக்கும் ஒரே இது’ என்றெல்லாம் எழுதுகிற டைப் அல்ல அவர். பல கட்டுரைகள்… பல பேட்டிகள்… எல்லாம் முத்துக்கே வெள்ளை பெயிண்ட் அடித்தது போல நச்சென இருக்கும். ஐயோ பாவம்… வார்த்தைகளில் இருந்த நச், அவரது வாழ்க்கையில் இல்லை! இதயத்தில் ஓட்டை! சுமார் நாற்பதை கடந்துவிட்ட அவருக்கு, அந்த ஓட்டையை அடைக்கிற அளவுக்கு வசதியும் இல்லை. வருமானமும் இல்லை. வேறென்ன செய்வது?

தெரிந்த நடிகர் நடிகைகளிடம் கேட்டு பார்ப்பது. இல்லையென்றால் முடிந்தவரை போராடுவது. இந்த இரண்டே சாய்ஸ்தான். சற்று தயக்கத்தோடும் கவலையோடும் தனது முதல் சாய்ஸ்சை துவங்கினார் பத்மராஜன். நடிகர்களில் பல நல்லவர்கள் இருக்கிறார்கள். ‘நாம ஒரு நாளைக்கு செலவு பண்ணுற பணம்… ஒருவருக்கு உதவியா இருக்கட்டுமே?’ என்கிற தாராள மனசுள்ள சில ஹீரோக்கள் அப்போதும் இருந்தார்கள். இப்போதும் இருக்கிறார்கள். அந்த விஷயத்தில் அஜீத்தெல்லாம் தங்கம்! தட்டுவதற்கு கையே இல்லாதவர்கள் கூட, அஜீத்தின் ஆபிஸ் பக்கம் போனால் போதும், தானாக திறந்து கொள்ளும் அந்த தங்க மனசுக் கதவு! அவரால் படித்தவர்கள், அவரால் பிழைத்தவர்கள், அவரால் வாழ்ந்தவர்கள் தமிழகத்தில் பல இடங்களில் இருந்தாலும், ‘எங்கும் இது பற்றி வாயை திறக்கக் கூடாது’ என்று சொல்லிதான் உதவியே செய்வார் அவர்.

சொல்ல முடியாது. வேதாளம் விக்ரமாதித்யனுக்கு சொன்ன கதைகளில், அஜீத் அள்ளிக் கொடுத்த கதை ஒன்று இருந்தாலும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால், அது அமானுஷ்ய உலகத்தாலும் கவனிக்கப்பட்டிருக்க வேண்டிய விஷயம்.

பத்மராஜனின் கெட்ட நேரம், இவருக்கு நோய் வந்த நேரத்தில், நொடித்திருந்தார் அஜீத்! பெரிசாக படங்களும் இல்லாத நேரம். அதனால் அங்கு போய் அவருக்கு தொல்லை கொடுக்க விரும்பவில்லை பத்மராஜன். நெல்லையை சொந்த ஊராக கொண்ட ஒரு மக்கள் தொடர்பாளர், பத்மராஜனின் நிலையை பார்த்து அதிர்ந்து போனார். ‘நான் இருக்கேன். வாங்க, அந்த பெரிய நடிகரை போய் பார்க்கலாம்’ என்றார். கிளம்பினார்கள் இருவரும். தமிழ்சினிமா ரிசர்வ் பேங்க் என்றால், அதன் சவுகர்ய மூலையிலிருக்கும் பெட்டகம் இவர்தான். தமிழ்சினிமா அணைக்கட்டு என்றால், அதனுள்ளே தளும்பி நிற்கும் நீரே இவர்தான். அதனால்தானோ என்னவோ, நதிகளை இணைக்க வேண்டும் என்பதை இவரும் ஒரு கனவாக வைத்திருக்கிறார். அவரை பார்த்தால் நொடியில் பிரச்சனை தீர்ந்தது என்ற நம்பிக்கையில்தான் கிளம்பினார்கள் இருவரும்.

இந்த சந்திப்பு வயித்துவலி வந்தவனுக்கு வாட்ஸ் அப்புல மாத்திரை அனுப்புன கதையாகதான் முடியும் என்பது அப்போது தெரியவில்லை அவர்களுக்கு. பத்மராஜனை வெளியில் உட்கார வைத்துவிட்டு வீட்டுக்குள் போனார் நெல்லைக்காரர். சரக் சரக்கென வந்தமர்ந்த நடிகரிடம், ‘சார்… இவருக்கு இப்படியொரு பிரச்சனை. நீங்க உதவுனா அவர் உயிர் பிழைக்க வாய்ப்பிருக்கு’ என்று விளக்கமாக கூறினார்.

‘எனக்கு அவரு முன்ன பின்ன பழக்கமேயில்லையே? நான் எதுக்கு அவருக்கு உதவணும்?’ – இவர்.

‘இல்ல சார்… உங்களை நம்பி வந்திருக்கோம். கொஞ்சம் பெரிய மனசு பண்ணணும்.’ – நெல்லையூரார் வற்புறுத்த, ‘அப்படியா… கொஞ்சம் இருங்க’. உள்ளே எழுந்து போன நடிகர், சில வினாடிகளில் திரும்பியிருந்தார். அவர் கையில் ஒரு வெள்ளை கவர். ‘இந்தாங்க…’ அதை கொடுத்துவிட்டு அந்த மின்னல் மனிதர் சட்டென்று உள்ளே சென்றுவிட, அந்த கவரை தடவிப்பார்த்தே தர நிர்ணயம் செய்தார் நெல்லை. ரொம்ப ஒல்லியா இருக்கே, செக்கா இருக்குமோ? எனிவே… பார்த்துக்கலாம். சந்தோஷமாக வெளியே வந்தார்கள்.

தெருமுனையில் பைக்கை நிறுத்தி அவசரமாக பிரித்தால், அதற்குள் இரண்டே இரண்டு நூறு ரூபாய் தாள்கள்! பத்மராஜனுக்கு இரண்டாம் முறையாக ஹார்ட் அட்டாக் வந்ததே அந்த தெரு முனையில்தான்! ‘வேணாம் சார்… இனி ஒருத்தர் வீட்டு கதவையும் தட்றதா இல்ல’. பிடிவாதமாக இருந்தவர் சில மாதங்களில் செத்தே போனார். அவரது வியர்வைக்கல்ல, அவரது பிணத்திற்கு கூட இங்கு தங்க காசு கொடுப்பவர் யாரும் இல்லை!

பணத்தை அடைகாத்தால்தான் குஞ்சு, அடை காக்காமல் விட்டால் கடைசியில் மிஞ்சுவது வெறும் ‘முட்டை’தான்! இந்த எச்சரிக்கை உணர்வு வராத வரைக்கும், வள்ளல்தான் எல்லாரும்!

நான் மேலே சொன்ன நடிகருக்கு சமமான அந்தஸ்தில் இருக்கும் இன்னொரு நடிகர் இவர். ஒருமுறை இவரை நேரில் சந்தித்து தனது மகனின் திருமண அழைப்பிதழ் கொடுக்கப் போயிருந்தார் அந்த லைட்மேன். தகவல் சொல்லிவிட்டு ரிசப்ஷனில் காத்திருந்தார். சிறிது நேரத்தில் நடிகரே வெளியில் வந்தார். எடுத்த எடுப்பிலேயே, ‘ஏன்யா… ஏன் இந்த பொழப்பு உனக்கு?’ என்றுதான் ஆரம்பித்தார். ‘உன் மகன் கல்யாணத்துக்கு நான் வரப்போறதில்லன்னு உனக்கும் தெரியும். அல்லது வர்ற அளவுக்கு நீ எனக்கு பழக்கமான்னா அதுவும் இல்ல. ஷுட்டிங் ஸ்பாட்டில் நீ ஒரு தொழிலாளி. நான் ஒரு நடிகன். என் சம்பளம் எனக்கு. உன் சம்பளம் உனக்கு. அவனவன் அது அதுக்குள்ள வாழணும். அதைவிட்டுட்டு எங்கிட்ட வந்து பத்திரிகை கொடுக்கிற. பணம் வேணும். அதுக்கு நாகரீமா பிச்சை எடுக்கிற. அதானே…?’ என்றார் வெடுக் வெடுக்கென்று.

அவர் வாயிலிருந்து அந்தி மழை அனலாக பொழிய ஒவ்வொரு துளியிலும் அவர் மனசு தெரிந்தது! ‘யோவ்…’ என்று இந்தப்பக்கம் திரும்பி, ‘ஒரு இருவதாயிரம் கொடுத்தனுப்பு’ என்று மேனேஜரிடம் கூறிவிட்டு வெடுக்கென்று உள்ளே போய்விட்டார். இதில் யார் மீதும் தவறில்லை. ஒரு நாளைக்கு நூறு பேர் வருகிறார்கள் இப்படி. கல்யாணம், காதுகுத்து, பிரசவம், ஸ்கூல் பீஸ் என்று வந்து கொண்டேயிருந்தால் நடிகர்களும் என்னதான் செய்வார்கள்?

இன்னும் சிலர் போலி பத்திரிகையெல்லாம் அடித்து வசூலில் இறங்குவார்கள். சினிமாவுக்காக போலி சிறைச்சாலை, போலி கடற்கரை, போலி போலி என்று போலிகளையே உருவாக்கி பழகியவர்களால், ஒரு இன்விடேஷன் அடிக்க முடியாதா என்ன? இதுபோன்ற பொய்களை தினந்தோறும் பார்த்த ஹீரோக்களுக்கு கண்ணெதிரே தோன்றும் எல்லாமே பொய்யாகதான் தோன்றும்.

பத்மராஜன் கதை நிகழ்ந்த அதே கோடம்பாக்கத்தில்தான் இந்த கதையும்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஒரு படத்தில் நடித்தார். தினந்தோறும் ஷுட்டிங் நடந்தது ஒரு கட்டத்தில் இவரது போர்ஷனும் முடிந்தது. ‘சார்… உங்க பணத்தை ரிலீசுக்கு முன்னாடி கொடுத்துர்றோம்’ என்றார் தயாரிப்பாளர். வரப்பு கோணலா இருந்தாலும், விளைச்சல் பலமா இருக்கும்ங்கற நம்பிக்கை இருந்தது எஸ்.பி.பிக்கு. இந்த படம் வெளியாகி சக்கை போடு போடும். அப்போ கொண்டு வந்து கொடுத்துருவாங்க என்ற நம்பிக்கையோடு கிளம்பிவிட்டார்.

எப்படியோ? ஒவ்வொரு ஏரியாவாக விற்றார்கள். சில ஏரியாக்கள் விற்கவேயில்லை. கிடைத்தவரை பணத்தை வைத்துக் கொண்டு ஒரு காரில் ஏறி பணம் தர வேண்டியவர்கள் ஒவ்வொருவரையும் நேரில் பார்த்து கணக்கை செட்டில் செய்து கொண்டே போனார்கள் தயாரிப்பாளரும் தயாரிப்பு நிர்வாகியும். நாளைக்கு படம் ரிலீஸ். முதல் நாளே பணத்தை செட்டில் செய்யாவிட்டால் ரிலீசில் பிரச்சனை செய்வார்கள். அதனால்தான் இந்த ஏற்பாடு.

தனக்கு சொந்தமான கோதண்டபாணி ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் இருந்தார் எஸ்.பி.பி. ‘சார்… உங்களுக்கு பணம் கொடுக்க வந்துகிட்டேயிருக்கோம். வெயிட் பண்ணுங்க’. சொல்லிவிட்டு அடுத்த அரை மணி நேரத்தில் அங்கிருந்தவர்கள், பெட்டியை பிரித்து பணத்தை அவர் கையில் கொடுத்துவிட்டு கிளம்பினார்கள். வாசல் வரைக்கும் கூட போகவில்லை. அதற்குள் தயாரிப்பு நிர்வாகி, ‘அண்ணே… நம்ம லிஸ்ட்ல அந்த ஆளை விட்டுட்டோமேண்ணே… அவருக்கு கொடுக்கலேன்னா படத்தை ரிலீஸ் பண்ண விட மாட்டாரே?’ என்றார் வேறொரு டெக்னீஷியனின் சம்பளத்தை நினைவுபடுத்தி. சற்று முன் இந்த யோசனை வந்திருந்தால், எஸ்.பி.பி சம்பளத்தில் பாதியை மட்டும் தந்திருக்கலாமே என்ற எண்ணம் வந்திருந்தது இருவருக்கும்.

அதற்குள் ஜன்னல் வழியே இவர்கள் சென்றதையும் தயங்கி தயங்கி எதையோ பேசி குழம்பியதையும் கண்ட எஸ்.பி.பி, மெல்ல எழுந்து வெளியே வந்தார். ‘நீங்க வேற யாருக்கோ பணம் கொடுக்கணும்னு நினைக்கிறேன். எனக்கு பிரச்சனை இல்ல. இதை அப்படியே எடுத்துட்டு போய் அவருக்கு கொடுங்க. முதல்ல படத்தை ரிலீஸ் பண்ணுங்க. அப்புறம் பார்த்துக்கலாம் மற்றதையெல்லாம்’. சொல்லிவிட்டு காத்திருக்காமல் அவர்கள் தனக்கு கொடுத்த பணத்தை அப்படியே திருப்பிக் கொடுத்தார். கிறுகிறுத்துப் போனார்கள் இவர்கள்.

அந்த சம்பவம் நடந்த கோதண்டபாணி தியேட்டரே இப்போது இல்லை. எஸ்.பி.பி. மகன் தயாரித்த ஒரு படத்தின் கடனுக்காக போய் விட்டது அது. அந்த இடத்தில் சில தென்னை மர உயரத்திற்கு ஒரு அபார்ட்மென்ட் முளைத்திருக்கிறது.

‘கடவுள் நல்லவங்களை சோதிப்பான், ஆனா கைவிடமாட்டான்…’ என்பதெல்லாம் வெறும் வசனங்கள்தானோ?

(குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் ஆர்.எஸ்.அந்தணன் எழுதிய கோடம்பாக்கம் செக்போஸ்ட் தொடரிலிருந்து)

2 Comments
  1. Guhan says

    Nice article. Now I see why singaravelan’s are after that star. Greedy and stingy selfish people are going to valavikum tamil nadu.

  2. mathan says

    200 rupees actor is baba. bad word actor is aalavanthan

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இனிமே இப்படிதான்- விமர்சனம்

இனி பாக்யராஜே கிளம்பி வந்து பழைய சுவருக்கு சுண்ணாம்பு அடிச்சா கூட, இப்படியொரு கலர்ஃபுல் டச் கிடைக்குமா? டவுட்டுதான்! ஆனால் பாக்யராஜ் பாணி கதையில் சந்தானத்தை மிக்ஸ்...

Close