எமி ஓட்டம், விஜய் தவிப்பு? தெறியை தெறிக்க விட்ட நேரம் காலம்!
இந்த நியூஸ் கேட்டு, நயன்தாரா, தமன்னா, காஜல் வட்டாரங்கள் ஒரு ‘நீலாம்பரி’ புன்னகையை சிந்தினாலும் ஆச்சர்யமில்லை. ஏனென்றால், விஜய்யோடு மீண்டும் நடித்துவிட வேண்டும் என்று துடியாய் துடித்தது அவர்கள்தான். ஆனால் இந்த முறை பிரஷ் காம்பினேஷனாக இருக்கட்டும் என்று எமியை முடிவு செய்துவிட்டார் விஜய். படப்பிடிப்பும் படு ஜாலியாக நடந்து வந்தது. மீண்டும் ஒருமுறை அட்லீயுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று விஜய்யே விரும்புகிற அளவுக்கு இந்த ஷுட்டிங் ஸ்பாட் முழு மன நிறைவை தந்தது விஜய்க்கு.
அப்படியிருந்தும் ஏழரை கூடிவிட்டது. என்னவாம்?
புத்தாண்டு தினத்தன்று சென்னையில் இல்லை விஜய். குடும்பத்தோடு துபாய்க்கு பறந்துவிட்டார். படு கலக்கலாக கொண்டாடியவரிடம், இன்னும் ஒரு வாரம் இருந்துட்டு போகலாமே என்று குடும்பம் விரும்ப, “இல்லையில்ல… மூணாந் தேதியிலிருந்து தெறி ஷுட்டிங் இருக்கு” என்று பறந்தடித்துக் கொண்டு திரும்பிவிட்டார். வந்த இடத்தில்தான் வழுக்கல். 3 ந் தேதி எல்லாரும் ரெடி. லண்டனிலிருந்து சென்னைக்கு திரும்பிய எமி, ஏர்போர்ட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. ஏன்?
அவரது விசா காலாவதியாகிவிட்டது. புதுப்பிக்க வேண்டும் என்பதை மறந்தே போயிருந்தாராம். வேறு வழியில்லாமல் அடுத்த பிளைட்டை பிடித்து அவர் லண்டனுக்கே போய்விட்டார். மீண்டும் அங்கு விண்ணப்பித்து முறையாக அனுமதி பெற்ற பிறகே சென்னைக்கு வர முடியும்.
“ஒழுங்கா துபாய்லேயே இன்னும் நாலு நாள் இருந்திருக்கலாம்” என்று விஜய்யும், “ஏன்ங்க… நான்தான் மறந்துட்டேன். நீங்களாவது ஞாபகப்படுத்தக் கூடாதா?” என்று தனது மேனேஜரிடம் எமியும் புலம்பிக் கொண்டிருக்க, திரி குறைந்து திக்கி திக்கி எரிந்து கொண்டிருக்கிறது தெறி!