வை ராஜா வை- விமர்சனம்

புளிச்ச மாங்காய்க்கு ஆசைப்படறகுக்கு புள்ள தாச்சியாதான் இருக்கணும்னு அவசியம் இல்லையே? ஒரு பெண்ணாக இருந்தும், ஆக்ஷன், அடிதடி, சூதாட்ட கதையை கையிலெடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். அதற்காக பாராட்டுகள். அதேநேரத்தில் வவுத்தெரிச்சல், வாய்விட்டு புலம்ப வைக்குதே! ‘யம்மாடி… நீங்க படிச்ச டுடோரியல் காலேஜ்ல டைரக்ஷனை இன்னும் நல்லா படிச்சுட்டு வந்திருக்கலாம்ல?’

பல படங்களில் சந்தானத்தோடு மல்லு கட்டுவாரே, விஜய் டி.வி சாமிநாதன்? அவரை இந்த படத்தில் அவ்வளவு அடக்க ஒடுக்கமாக காட்டுகிறார்கள். அதுவும் ஒரு சில சீன்கள்தான் வருகிறார். தியேட்டரே அவர் சிரிப்பு மூட்டுவார் என்று காத்திருக்க, அண்ணாச்சிக்கு குணச்சித்திர கேரக்டர்! இப்படி வகை ஒன்றாக இருக்க… தொகை ஒன்றாக வளர்கிறது படம். அப்படியென்றால் மிச்ச படமும் எப்படியிருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டியதுதான்!

பின்னால் நடப்பதை முன் கூட்டியே அறிகிற விசித்திர வியாதி இருக்கிறது ஹீரோவுக்கு. அதுவும் திடீர்னு தோணும். அது அப்படியே நடக்கும். கவுதம் கார்த்திக் அப்படியொரு விசேஷனுமான வியாதியஸ்தர் என்பதை புரிந்து கொள்ளும் விவேக், நைசாக அவரை வைத்து சூதாட கிளம்புகிறார். ஒரு கோடி சுளையாக கிடைக்கிறது. அதில் பத்து லட்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, (அதுவும் தங்கச்சி கல்யாணத்திற்காகவாம்) மிச்சத்தை விவேக்கிடமே திருப்பிக் கொடுத்துவிட்டு, ‘இனிமே இந்த மாதிரி தப்பு வேலைக்கே வர மாட்டேன்’ என்று கிளம்புகிறார் கவுதம். கொடியவர்கள் விட்டால்தானே? தங்கச்சி கல்யாணத்தை நிறுத்திடுவேன். அப்பாவை போட்டுத் தள்ளிடுவேன். உன் லவ்வரு கற்புல கற்பூரத்தை பற்ற வச்சுருவேன் என்றெல்லாம் மிரட்டி மிரட்டியே பணிய வைக்கிறார் வில்லன் டேனியல் பாலாஜி.

ஒரு அழகான கப்பலில் நடக்கும் சூதாட்டத்தில் கவுதமை ஈடுபட வைக்கிறார். (அங்கு இவர்கள் ட்விஸ்ட் என்று நினைத்து வைத்திருக்கும் அந்த காட்சிகளுக்கு பதில், கப்பலை இன்னும் நல்லா நாலு சுற்று சுற்றி காண்பித்திருந்தால் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் புண்ணியத்தில் எல்லாரும் சந்தோஷத்தை அனுபவித்திருக்கலாம். ஹ்ம்ம்ம்ம்…) தானும் தப்பி, டேனியல் பாலாஜியையும் எப்படி மாட்ட விடுகிறார் ஹீரோ என்பதுதான் க்ளைமாக்ஸ். சமையல் நேரத்தில் அரை வேக்காட்டுல அடுப்புல தண்ணிய தெளிச்ச மாதிரி, படத்தையும் திடீரென முடிக்கிறார்களா… அதை இன்ப அதிர்ச்சியாக எடுத்துக் கொள்வதா? இப்படியாகிருச்சேன்னு கவலைப்படறதா?

ஒரு வில்லன் எப்படியிருப்பான்? அவனது நடை உடை பாவனைகள் எவ்வளவு எரிச்சல் மூட்டும்? அந்த அழகை(?) கடவுள் பிறப்பிலேயே கொடுத்திருக்கிறான் டேனியல் பாலாஜிக்கு. இந்த படத்தில் தன் வேலையை மிக சிறப்பாக செய்திருப்பவர் அவர் மட்டும்தான். அதற்கப்புறம் விவேக். ஆளே சற்று ‘பல்க்’ ஆக இருக்கிறார். பல ஆண்டுகளாக தொடரும் எடக்கு, இடக்கு என்று வாய்ஜாலம் காட்டுகிறார். அவர் ஏற்றுக் கொண்ட அந்த பாண்டா கேரக்டரை பதப்படுத்தி சிரிக்க வைக்கிறார். கோப்ப்ப்ப்பால் என்று திடீர் சரோஜாதேவியாகி அவர் அடிக்கும் கூத்து ஒன்ஸ்மோர் டைப். கூடவே வரும் சதீஷ் செம மொக்கை போடுகிறார். இருந்தாலும், அவரையும் சிரிப்பு நடிகர் என்று உலகம் ஏற்றுக் கொண்டிருக்கிறதே… எந்த சுவற்றில் முட்டிக் கொள்ள?

கடைசியாகதான் வருகிறார் ஹீரோ. அவரது அப்பா கார்த்திக்கின் மேனரிசத்தை கால்வாசி காப்பியடித்தாலே போதும். காலகாலத்திற்கும் இவர்தான் கலெக்ஷன் ஹீரோ. ஆனால் என்னவோ முகத்திலும், உடலிலும் உட்காருவேனா என்கிறது நடிப்பு. இவருக்கும் பிரியா ஆனந்துக்குமான லவ்வில் அதிகம் ட்விஸ்ட் இல்லை. ருசிகரம் இல்லை. இருந்தாலும், அவ்வப்போது டூயட்டுகளை போட்டு ‘லவ் பண்ணுங்க லவ் பண்ணுங்க’ என்று டார்ச்சர் பண்ணியிருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். விளைவு? அது ‘பாட்டுக்கு’ கடக்கிறது பாட்டு!

பாட்டு என்றதும்தான் இசையமைப்பாளரே ஞாபகத்திற்கு வருகிறார். யுவன்ஷங்கர்ராஜா! எல்லா பாடல்களும் கேட்ட மெட்டில் இருந்தாலும், நன்றாக ரசிக்க முடிகிறது.

டைரக்டர் வசந்த்தும் நடித்திருக்கிறார். யூஷுவலான அப்பா கேரக்டர். அவர்தான் என்ன பண்ணுவாராம்? டாப்ஸியை மெழுகு பொம்மையாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ். அதற்காகவே அவருக்கு ஒரு நமஸ்காரம்.

படத்தின் ஒரே ஆறுதல் தனுஷ்! ஒரு நிமிஷமே வந்தால் கூட, மனுஷன் என்னமா டபாய்க்குறாருப்பா! ஒரு கானா பாலா பாடலுக்கு எஸ்.ஜே.சூர்யாவை இறக்கிவிட்டிருக்கிறார்கள். அவருக்கும் கானா பாலாவுக்கும் அதிக வித்தியாசமில்லை.

காதில் கேட்ட விஷயங்களையெல்லாம் வைத்துக் கொண்டு ஏகப்பட்ட ஆர்வத்தோடு உள்ளே போனால், அத்தனையும் ‘பொய் ராஜா பொய்! ’

-ஆர்.எஸ்.அந்தணன்

Read previous post:
செம்மீன் ஷீலாவை தத்தெடுத்த விவேக்

சிரிக்கத் தெரிந்த  ஒரே உயிரினம் மனித இனம்மட்டும் தான். சிரிக்கத் தெரியாதவனுக்கு பகல் பொழுதும் இருட்டே என்கிறார் திருவள்ளுவர். சிரிக்காத நாட்களை வாழாத நாட்களாகவே கணக்கிட வேண்டும்....

Close