அட்லிக்கு விஜய் தந்த கிறிஸ்துமஸ் பரிசு! ஆஹா ஓஹோ அடடே!
“அவரே வந்துட்டாரே…” என்று அசந்து போன அட்லீக்கு அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுத்து அதிர வைத்துவிட்டார் விஜய். பொதுவாக பண்டிகை நாட்களில் ராஜா அரச மண்டபத்துலேயே இருப்பார். சேவகர்களும் மந்திரிகளும் அவரை சென்று வணங்கி அருள் பெற்று திரும்புவார்கள். இன்றைய டாப் ஹீரோக்களில் முக்கியமானவரான விஜய்யும் இருந்த இடத்திலேயே இருந்து ஆசிர்வதித்திருக்கலாம். ஆனால் அவரே டைரக்டர் அட்லீயின் வீடு தேடிப் போய்விட்டாராம். இது கிறிஸ்துமஸ் தின சிறப்பு தரிசனம்!
வீடே வாசலில் நின்று அவரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றதாம். நல்லது… அதற்கப்புறம் நடந்ததெல்லாம் அதைவிட நல்லது நல்லது! பேசிக் கொண்டேயிருந்த விஜய்யிடம், சார்… உங்க அடுத்தடுத்த கமின்மென்ட்டுகள் என்ன என்று கேட்டிருக்கிறார் அட்லீ. அடுத்து பரதன் படம் பண்றேன். அதற்கப்புறம் அட்லீன்னு ஒரு டைரக்டர் இருக்கார். இப்போ தெறின்னு ஒரு படம் பண்ணிட்டு இருக்கார். அவரு படம் பண்றேன் என்று விஜய் சொல்ல, கிளி பொந்து தேடி வந்து புதையலை வைக்குதே என்று பேரதிர்ச்சிக்கு ஆளாகிவிட்டாராம் அட்லீ.
சார்… என்ன சொல்றீங்க? என்று இன்ப அதிர்ச்சி விலகாமல் கேட்க, உண்மையாதான் சொல்றேன். கதையை ரெடி பண்ணிட்டு எப்ப வேணா கூப்பிடுங்க என்று கூறியிருக்கிறார் விஜய்.
பொதுவாக ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அந்த படத்தின் படப்பிடிப்பு எப்படி போகிறது. கம்பர்ட் லெவல் நமக்கு எப்படியிருக்கிறது என்பதையெல்லாம் அனுமானிப்பார்கள் பெரிய ஹீரோக்கள். பிடித்திருந்தால் அவர்களையே திரும்ப திரும்ப ரிப்பீட் பண்ணுவார்கள். இது அட்லீ விஷயத்தில் விஜய் அனுமானித்து எடுத்த முடிவாக இருக்கலாம்.
பட்… இந்த முடிவு நல்ல முடிவுதாங்ணா!