விஜய் விருந்து… சூர்யா என்ட்ரி… நைசாக எஸ்கேப் ஆன முருகதாஸ்!
பார்க்க அமைதியாக இருந்தாலும், நண்பர்களுடன் கூடி விட்டால் பட்டாசு பொறிதான் விஜய். அவரால் கலகலவென்று சிரிக்கவும் தெரியும் என்பதை அவரது நட்பு வட்டத்திலிருக்கும் நடிகர்கள் இப்போதும் கமுக்கமாக சொல்லி கலகலப்பாவது தனிக்கதை. அப்படிதான் அவ்வப்போது தனது நண்பர்களுக்கு மட்டும் ரகசிய பார்ட்டி வைக்கும் வழக்கம் விஜய்க்கு இருக்கிறது. அண்மையில் அவர் ஒரு விருந்து வைத்தாராம். விருந்தில் கலந்து கொண்டவர்கள் மொத்தம் 25 பேர். அதுவும் விஜய்யின் வட்டாரத்தில் நெருங்கிய பரிச்சயமானவர்களுக்கு மட்டுமே இந்த அனுமதி.
அவரே அழைக்கிறார் என்றால் அந்த இருபந்தைந்து நண்பர்களும் திரையுலகத்தில் எப்படிப்பட்ட உயரத்திலிருந்தால் சாத்தியம்? யெஸ்… நடிகர் சூர்யா ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட மிக மிக முக்கியமானவர்கள் மட்டும் இருந்தார்கள் அந்த அழைப்பில். துப்பாக்கி, கத்தி என்று விஜய்யின் பக்கத்திலேயே இருக்கும் முருகதாஸ், சற்று முன்னதாகவே போய்விட்டாராம். எல்லாம் நல்லபடியாகதான் போய் கொண்டிருந்தது. திடீரென ஒரு பரபரப்பு. வாசலில் சூர்யா வந்து கொண்டிருக்கிறார் என்று. அதுவரை சூர்யா அங்கு வருவதை பற்றி அறியாமலே இருந்தாராம் ஏ.ஆர்.முருகதாஸ். அவ்வளவுதான்.. என்ன நினைத்தாரோ? படக்கென அங்கிருந்து வேறொரு வழியாக எஸ்கேப்! போகும்போதே செல்போன் மூலம் விஜய்யிடம், தான் வீட்டுக்கு கிளம்புகிற தகவலை சொல்லிவிட்டு வேக வேகமாக வேறொரு வழியாக கிளம்பிப் போய்விட்டாராம்.
‘ஏழாம் அறிவு’ படத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் அதிகம் சந்தித்துக் கொள்வதில்லை. இருந்தாலும் சூர்யாவுக்கு ஒரு படம் பண்ணணும் என்று முருகதாசும், முருகதாஸ் சார் படத்தில் மீண்டும் நடிக்கணும் என்று சூர்யாவும் தனித்தனியாக பேட்டி கொடுத்துக் கொள்வது தனி விடுகதை. இந்த விருந்தில் சூர்யாவை கண்டு ஏன் முருகதாஸ் ஓடினார் ? என்பதற்கு உருப்படியான ஒரு தகவலும் கிடைக்காத தமிழ்சினிமாவின் ‘சிறப்பு செய்தி கசிய விடுவோர் பிரிவு’ தலையை பிய்த்துக் கொண்டு தவியாய் தவிக்கிறது.