ஆமாங்கிறார் விஜய் இல்லேங்கிறார் ஜெயம் ரவி
அரசியல் கூட்டணி கூட ஒரு கட்டத்தில் உறுதியாகிவிடும். இந்த சினிமா கூட்டணி இருக்கே? முடிவு வர்றதுக்குள்ள முதுகு தண்டுல கோலம் போட்ருவாய்ங்க. நாளைக்கு ஷுட்டிங் என்று கிளம்பிய பல காம்பினேஷன் முதல் நாள் இரவே காலாவதியான கதையெல்லாம் இங்கு உண்டு. இங்குதான் கடந்த சில வாரங்களாக ஒரு காம்பினேஷன் மேட்டர் ‘களை’ கட்டிக் கொண்டிருக்கிறது.
தனி ஒருவன் படத்திற்கு முன் “ஜெயம் ரவி யாரு படத்துல நடிச்சா நமக்கென்னடா?” என்று மெத்தனப் போக்குடன் அணுகிய ரசிகர்களுக்கெல்லாம் அதற்கப்புறம் வந்த ஆர்வம் இது. “அவரோட அடுத்த படம் என்னங்க?” அந்த ஒரு கேள்விக்காகவே செய்திகளை முந்தித்தர நினைக்கும் ஊடகங்கள் விழுந்தடித்துக் கொண்டு தகவல்களை கலெக்ட் பண்ண… அதற்கப்புறம் வருகிற செய்திகள் எல்லாம் அக்கப் போர்…. வைக்கப்போர்… !
அப்படி வந்ததுதானா இப்படியொரு செய்தி? தெய்வத்திருமகள், சைவம், பட இயக்குனரான ஏ.எல்.விஜய்யின் படத்தில் ரவி நடிக்கிறார். இது ஒரு செய்தி. ஏ.எல்.விஜய்யிடம் கேட்டால், “ஆமாம் சார். அந்த செய்தி உண்மைதான்” என்றார் நம்மிடம்! ஜெயம் ரவி என்ன சொல்கிறார்? “சார்… இப்போதைக்கு நான் சொல்றது ஒரே படத்தை பற்றிதான். அது மிருதன். மற்ற படங்கள் பற்றியெல்லாம் இப்போதைக்கு சொல்றதுக்கு இல்லே” என்றார்.
கேவிஆனந்த்- ஜெயம்ரவி இணைவதாக வந்த செய்திகளுக்கும் கூட இதே மறுப்புதான். “இன்னும் நான் அவர்ட்ட கதையே கேட்கல” என்கிறார் ரவி. ஆனால் கதை கேட்க இவர் தயாரான நாளில் ஜுரம் வந்து கெடுத்துவிட்டதாம். “மிருதன் வரட்டும்… மற்றதை அப்புறம் சொல்றேன்” என்கிறார் ஜெயம் ரவி.
சொல்ற இடத்துல அவர் இருக்கார். கேட்கற இடத்துல நாம இருக்கோம். வேற வழி?