புலி- உதவிய உள்ளங்களுக்கு விஜய் தனித்தனியாக நன்றி!

புலி படத்தின் கடைசி நேர சிக்கலையும், சிரமத்தையும் எழுதினால் அம்மிக்கல் அழும்! ஆட்டுரலும் தேம்பும்! கிடைக்கிற இடத்திலெல்லாம் கிடுக்கிப்பிடி போட்ட வருமானவரித்துறையின் செயலால், படத்தை ரிலீஸ் செய்ய முடியுமா என்கிற அளவுக்கு போனது நிலைமை. அந்த நேரத்தில் ஓடோடி வந்து உதவிய உள்ளங்களில் முதலிடத்தில் இருக்கிறார்கள் சகலகலாவல்லவன் டி.ராஜேந்தரும், தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னமும், பைனான்சியர் ஜஸ்வந்த் பண்டாரியும், தயாரிப்பாளர் சங்க செயலாளர் பைவ் ஸ்டார் கதிரேசனும் இன்னும் சிலரும். இதில் பண உதவி செய்தவர்கள், நேரம் காலம் ஒதுக்கி முயன்றவர்கள் என்று பேதம் பார்க்காமல் அத்தனை பேருக்கும் போன் செய்து நன்றி தெரிவித்தாராம் விஜய்.

“உங்களுக்கு நிறைய சிரமத்தை கொடுத்துட்டேன். அவ்வளவு இக்கட்டான நேரத்திலும் எனக்காக வந்து உதவிய உங்களுக்கு நன்றி” என்று விஜய் சொல்ல, போனில் இந்தப்பக்கம் இருந்தவர்களுக்கு சொல்ல முடியாத அளவுக்கு நெகிழ்ச்சி.

இதற்கிடையில் ஏ.எம்.ரத்னத்திற்கு இன்னும் ஒரு சிறப்பு நன்றியை தெரிவித்திருக்கிறார் விஜய். அதுதான் அட்லீ படத்திற்கு பிறகு தான் நடிக்கும் படத்தை தயாரிக்கும் பொறுப்பு. யெஸ்… அந்த படத்தை எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் ஏ.எம்.ரத்னம்தான் தயாரிக்கிறாராம்.

புலி படம் தொடர்ந்து ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருந்தாலும், பொருளாதார ரீதியாக நெருக்கப்பட்டிருக்கிறார் விஜய். அதையெல்லாம் சமாளித்து எழ, இன்னும் இரண்டு படங்கள் வெற்றியோ வெற்றி என்று கொண்டாடப்பட்டாலொழிய சாத்தியம் இல்லை. அதை நோக்கிதான் முடுக்கிவிடப்பட்டிருக்கிறார்கள் அட்லீயும், எஸ்.ஜே.சூர்யாவும்!

பதுங்குன புலி பாயட்டும்…

Read previous post:
கத்துக்குட்டி வீடியோஸ்

1. கத்துக்குட்டி டிரைலர் https://www.youtube.com/watch?v=O7wgqkpcbSg 2. கத்துக்குட்டி சூப்பர் மெலடி https://www.youtube.com/watch?v=u4oK3BeEnjs&feature=youtu.be 3. சூரி சந்தியா சூப்பர் ஆட்டம் https://www.youtube.com/watch?v=utQduuVYUs4 4. கத்துக்குட்டி நீக்கப்பட்ட பாடல் https://www.youtube.com/watch?v=URNHPkrdjgc&feature=youtu.be

Close