மறுபடியும் சரக்கு? காரணம் இருக்கு அதுக்கு! ஆர்யா கூட்டணி அதிரடி பதில்…
டாஸ்மாக்கின் பிராண்ட் அம்பாசிடர் ஆகாமல் விட மாட்டார் போலிருக்கிறது டைரக்டர் ராஜேஷ் எம். இவர் இயக்கத்தில் விரைவில் வெளிவர இருக்கும் ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ படத்திலும் சரக்கு ஓவர்தான். ஒட்டுமொத்த தமிழ்நாடுமே இப்போ டாஸ்மாக்குக்கு எதிரா ஒரு பீடு நடை போட ஆரம்பிச்சுருக்கு. இந்த நேரத்தில் கூடவா நீங்க சரக்கை விட்டுட்டு வெளியில் வரக்கூடாது? இப்படியொரு கேள்விக்காகவே காத்திருந்த மாதிரி பேச ஆரம்பித்தார் ராஜேஷ்.எம்.
சார்… நல்ல கேள்வி கேட்டீங்க. நானும் இதற்கு பதில் சொல்லணும்னு ரொம்ப நாளா காத்திட்டு இருந்தேன். என் படத்தில் சிகரெட் பிடிக்கிற காட்சிகள் இருக்காதுன்னு சொன்னேன். அதை இப்போ கடை பிடிக்கிறேன். ஆனால் நான் காமெடி படம் எடுக்கிறவன். ஒருவன் குடிச்சுட்டு பேசுறதா எடுக்கும்போது நிறைய அதற்குள் காமெடி டயலாக் வைக்க முடியுது. சட்டுன்னு எல்லாரையும் சிரிக்க வைக்கவும் முடியுது. இருந்தாலும் கொஞ்ச நாளா பட விளம்பரங்களில் VSOP ங்கிற எழுத்தை தவிர்த்திருக்கிறோம். மற்றவங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிச்சுதான் அப்படி செய்தேன் என்றார். பக்கத்திலிருந்த ஆர்யா முகத்தில் நோ ரீயாக்ஷன்.
இருந்தாலும் ராஜேஷுக்காக பரிந்து பேச வேண்டுமே? ‘சார்… இதையெல்லாம் விட்டுட்டு சீரியஸ்சா ஏ.ஆர்.முருதாஸ் மாதிரி படம் பண்ண சொன்னா கேட்டாதானே? எனக்கு இதுதான் வரும்ங்கிறார்’ என்றார்.
‘ஆர்யா சொன்னது உண்மைதான். எனக்கும் நடுவுல அப்படியொரு ஆசை இருந்திச்சு. ஆனால் ராஜேஷ் படம்னா இப்படியிருக்கும்னு ஒரு பிராண்ட் விழுந்திருச்சு. அதை ஏன் கெடுத்துப்பானேன்? ரொம்ப பேருக்கு அப்படியெல்லாம் கூட ஒரு பிராண்ட் அமையறதில்ல. அதனால் கடைசி வரை காமெடி படம்தான் நம்ம ரூட்’ என்றார் கிளியராக!
தமிழ்நாட்லேர்ந்து சரக்கை ஒழிச்சா… ஐயோ பாவம். கதை எழுத ரொம்ப தவிச்சுருவாரு போலிருக்கே?