சரத்குமாரோடு சேர்ந்து நடிப்பேன்! விஷால் அறிவிப்பால், இன்டஸ்ரியில் பரபரப்பு
இந்திய தேர்தல் ஆணையமே அலறி அடித்துக் கொண்டு, “என்னங்கடா நடக்குது அங்க?” என்று அசந்து போகிற அளவுக்கு உலகத்தின் கண்களை தன் பக்கம் திருப்பிய தேர்தல், நடிகர் சங்கத் தேர்தல்! அடிதடி, வெட்டுக்குத்து, ரத்தக்களறி அப்படி எதுவும் இல்லாமல் தேர்தல் நடந்தாலும் அவ்வளவு கொலவெறியையும் மனசுக்குள் புதைத்துவிட்டு ஒரு தரப்பு இன்னொரு தரப்பை ஆறத் தழுவ தயாராகி வருகிறது. அதன் முதல் கட்ட ஆராதனைதான் இது.
சிவனே என்று இருந்த விஷாலை, தன் ஷார்ப் நாக்கால் இழு இழுவென இழுத்து தேர்தல் களத்தில் இறக்கிவிட்டவரே ராதாரவிதான். நாயே பேயே என்று கண்டமேனிக்கு அவர் திட்டி திட்டி, விஷால் என்ற மண் புழுவை புலியாக சீற வைத்துவிட்டார். முடிவுதான் நாட்டுக்கே தெரியுமே? அதற்கப்புறமும் கொலவெறியோடு திரிந்தால், அது தனக்கும் நல்லதல்ல. சங்கத்திற்கும் சவுகரியமானதல்ல என்பதை புரிந்து கொண்டாரோ என்னவோ? விஷால் நடிக்கும் மருது படத்தில் ராதாரவிக்கு முக்கிய ரோல் கொடுக்கப்பட்டிருக்கிறதாம். இப்படி ஒரு செய்தி அதிகாரபூர்வமாக உலவிக் கொண்டிருக்கிறது இன்டஸ்ரியில். இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த விஷாலிடம் அந்த கேள்வி முன் வைக்கப்பட்டது.
உங்க மருது படத்தில் ராதாரவி நடிக்கிறாராமே? நிஜமா?
மழுப்பல்தான். ஆனால் நழுவாமல் பதில் சொல்லிவிட்டார் அவர். “ஒரு கதைக்கு என்ன தேவைப்படுது. அந்த கேரக்டரில் யார் நடிச்சா நல்லாயிருக்கும்னு முடிவு பண்றது டைரக்டர்தான். ஒருவேளை மருது படத்தின் டைரக்டர் முத்தையா அவரை நடிக்க வைக்கணும் என்று விரும்பினால் நான் தடுக்க மாட்டேன். நடிகர் சங்கத்தில் நடந்த தேர்தல் வேறு. படம் வேறு. ராதாரவி மட்டுமில்ல. சரத்குமாரோடு கூட நான் சேர்ந்து நடிக்க தயாராக இருக்கேன்” என்றார் விஷால்.
ஒரு கொடியில் இரு மலர்கள். இரு மலரும் பனி மலர்கள்னு ஒரு ட்யூனை போட்டு பாடுனாலும், மக்களே…. ஆச்சர்யப்படாதீங்க! சினிமா வேற… போட்டி வேற!