அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் முகமெல்லாம் மறந்து போச்சு! மேடையில் குமுறிய போண்டா!
கவுண்டமணிக்கு பிறகு மக்களால் அறியப்பட்ட இன்னொரு மணி நம்ம போண்டாமணி! பிலிம் இருக்கிறதோ இல்லையோ? ஒரு காலத்தில் எல்லா படங்களிலும் இந்த போண்டா மணி இருப்பார். ஜனங்க நம்ம காமெடிக்கு சிரிக்குறாங்களோ இல்லையோ? நாம நம்ம வேலையை பார்ப்போம் என்று அவர் பாட்டுக்கு பேசுவார். சமயங்களில் அறுத்தும் தள்ளுவார். இருந்தாலும், இதையே தொழிலாக கொண்ட அவர் வயிறும் இயங்க வேண்டுமே? அவர் குடும்பமும் அடுப்பெரிக்க வேண்டுமே? தவறாமல் போண்டாவை பயன்படுத்தி வந்தது சினிமா. இப்போது? சொல்லொணாத் துயரம்தான்.
நேற்று சென்னையில் நடந்த ‘சும்மாவே ஆடுவோம்’ படத்தின் பாடல் வெளியீட்டுக்கு வந்திருந்தார் அவர். படத்தை இயக்கியிருப்பது போண்டாமணிக்கு சற்றும் குறைவில்லா திறமை கொண்ட காதல் சுகுமார். நல்லவேளை படத்தில் இவர் நடிக்கவில்லை என்ற ஆறுதல் செய்தியோடு விழாவை துவங்கினார்கள். நிகழ்ச்சியில் மைக்கை பிடித்த போண்டாமணிதான் புலம்பி தள்ளிவிட்டார் புலம்பி.
முன்னெல்லாம் அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் படங்களில் நடிக்க சொல்லி அழைப்பு வரும். இப்போ எல்லாரும் எங்களை மறந்துட்டாங்க. பெரிய படங்கள் எதற்கும் என்னை மாதிரியான ஆட்களை கூப்பிடுவதில்ல. ஏதோ காதல் சுகுமார் மாதிரி சின்ன படம் இயக்குறவங்களும், சின்ன படத் தயாரிப்பாளர்களும்தான் கூப்பிடுறாங்க. அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் முகமெல்லாம் எப்படியிருக்கும்னு எனக்கு மறந்தே போச்சு என்றார் வேதனையாக!
பேசிட்டிங்கல்ல… நாளைக்கே உங்களை கூப்பிட்டு ஒப்பந்தம் போட்டுட்டுதான் அடுத்த வேலையை பார்ப்பாங்க!
பின்குறிப்பு- இந்த படத்தில் போண்டாமணி, கொட்டாச்சி உள்ளிட்ட 40 காமெடியன்களுக்கு வாய்ப்பளித்திருக்கிறார் காதல் சுகுமார். நல்லாயிருங்க நல்லாயிருங்க!