டார்லிங் விமர்சனம்

‘பயமாயிருக்கு. துணைக்கு ஒரு ஆவிய கூப்பிட்டுகிட்டா தேவலாம்’ங்கிற அளவுக்கு பேய் பிசாசு ஆவிகள் மீது அபரிமித அன்பை ஏற்படுத்த முனைந்து கட்டிக் கொண்டு நிற்கிறது அண்மைகால தமிழ்சினிமா. ட்ரெண்டு அப்படியிருந்தாலும், ஆவிகளை ஃபிரண்டாக்கிக் கொள்கிற அளவுக்கு அது போகணுமா என்கிற கேள்விகள் எழாமலில்லை. இந்த டார்லிங்கும் அப்படியொரு காதல் ஆவிதான்! (தியேட்டர்ல எங்கு பார்த்தாலும் ஒரே சின்னக்குழந்தைங்க. பரிசுத்த ஆவிகளே… இப்படியாகிருச்சே உங்க டக்கு?)

ஆசைப்பட்டு காதலித்த சிருஷ்டி டாங்கே கேரக்டர் விஷயத்தில் ‘அப்படி இப்படி!’ ஒரு நாள் அதை நேரில் பார்த்து மனசு தாங்காத ஜி.வி.பிரகாஷ், தற்கொலை செய்து கொள்ள கிளம்புகிறார். ஏதோ அவர் பாருக்கு கிளம்புகிற மாதிரி ‘நானும் வர்றேன்’ என்று கிளம்புகிறார்கள் அவரது நண்பர்களான பாலா சரவணனும், நிக்கி கல்ராணியும். இதில் நிக்கிக்கு பிரகாஷ் மீது ஒரு ‘லுக்’கி! இட் மீன்ஸ் ஒன்சைட் லவ்! ஜி.வி.பிரகாஷின் தற்கொலை எண்ணத்தை தடுத்து, நிக்கியுடன் அவரை ஒட்ட வைப்பதுதான் பாலாவின் எண்ணம். போகிற வழியில் அதே தற்கொலை எண்ணத்துடன் திரியும் கருணாஸ் இவர்களுடன் லிப்ட் கேட்டு இணைந்து கொள்ள, அத்தனை பேரும் ஒரு கடலோர பங்களாவுக்கு போகிறார்கள். போன இடத்தில் நடக்கிற ஆவியுலக அலட்டல் மிரட்டல்கள்தான் மிச்ச மீதி க்ளைமாக்ஸ்.

பயந்து அலறி துயரப்படாதீர்கள் மனமே… உங்க சிரிப்புக்கு நான் கியாரண்டி என்று முடிவெடுத்து கதை நகர்த்துகிறார் இயக்குனர் சாம் ஆன்ட்டன். சும்மா சொல்லக்கூடாது. இரண்டரை மணி நேர அல்டிமேட் சந்தோஷத்தை தருகிறது படம்.

ஜி.வி.பிரகாஷுக்கு கைவசம் இசைங்கிற வரம் இருக்கு. இந்தாளுக்கு எதுக்கு தேவையில்லாத வேலை? என்று இந்த ஷோவை பார்ப்பதற்கு முந்தைய நிமிடம் வரைக்கும் முணுமுணுத்தவர்கள், அத்தனை பேச்சையும் வாபஸ் பெற்றுக் கொள்ளலாம். ஒரு குட்டி தனுஷ் போல போட்டு மிரட்டுகிறார் ஜி.வி. காதலிக்கிற பெண்ணை தொட்டால் அவள் அடுத்த வினாடியே ஆவியாக மாறி, அந்தரத்தில் வீசுகிறாள். அடுத்த நிமிஷமே என்னாச்சு என்று அச்சுவெல்ல கட்டியாகிறாள். இந்த நிலைமையில் ஒட்டவும் முடியாமல் எட்ட நின்று வேடிக்கை பார்க்கவும் முடியாமல் தவிக்கும் தவிப்பை இயல்பாக வெளிப்படுத்துகிறது பிரகாஷின் முகம். ஒரு காட்சியில் ‘விட்டா போதும்’ என்று அவர் ஓடுவதெல்லாம் செம்ம…! அட, ஆக்ஷன் காட்சிகள் கூட அசால்ட்டாக வருதேய்யா உமக்கு? குளோஸ் அப்ல வந்து பஞ்ச் டயலாக் பேசுற காலம் வரைக்கும் ஜி.வி.பிரகாஷை ரசிக்க இப்பவே கூட்டம் ஃபுல்!

அப்புறம் நிக்கி கல்ராணி. (இந்த பூவுக்கு கல்லுன்னு பேரு வச்ச ஆசாமிக்கு சுட சுட ஏதாவது கொடுங்கப்பா). ஜி.வி.பிரகாஷிடம் காதலாகி கசிந்துருகும் போது ரசிக்க வைக்கும் இதே ஃபிகர், பேயாக மாறி மிரட்டும் போது கூட, ரசிக்க வைப்பதுதான் அழகிய முரண்.

என்னவொரு ஆச்சர்யம். பல வருடங்கள் கழித்து மீண்டும் ஃபுல் பார்ம்முக்கு வந்திருக்கிறார் கருணாஸ். அவர் வருகிற காட்சிகள் எல்லாம் தியேட்டரே ரகளையாகிறது. அந்த மந்திரிச்ச முந்திரியையெல்லாம் ஒவ்வொன்றாக தின்றுவிட்டு தானும் அடி வாங்கி, கோஸ்ட் கோபால் ராவ்வான ராஜேந்திரனையும் சிக்கலில் மாட்டிவிடுகிற அந்த காட்சியும் அல்டிமெட்தான்! ஆமா… அந்த ராஜேந்திரனுக்கு இன்னும் நாலைஞ்சு சீன் கொடுத்திருக்கலாமே சாம்?

பாலா சரவணனுக்கு ஃபிரண்ட் ரோல். ஆனால் எந்த படத்திலும் அவருக்கு வாய்த்திராத front ரோல்! இதுக்கு ஸ்ரெயிட்டா மாமா வேலை பார்க்கலாமே என்று கருணாஸ் குதறிய பிறகும் அந்த சிரிப்பு மாறாமல் லவ்வர்சை கோர்த்துவிட ட்ரை பண்ணுகிறாரே.. சந்தோஷக் கூச்சலில் மிதக்கிறது தியேட்டர். (ஆளும் மண்டையும்… என்கிற ஒரு வசனத்தை நடிக்கும் எல்லா படத்திலும் ரிப்பீட் பண்ணுவதுதான் புடிக்கல ப்ரோ)

அப்புறம் படத்தில் வரும் அந்த பங்களாவும் ஒரு கேரக்டராக சேர்ந்து கொள்வதை சொல்லியே ஆக வேண்டும். பொருத்தமாக வைக்கப்பட்டிருக்கும் லைட்டிங்குகளும், கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவும் விசேஷம். மற்றவங்க நடிக்கிற படத்திற்கே மிரட்டல் இசை கொடுப்பார் ஜி.வி. இது அவரே நடித்திருக்கும் படம். விடுவாரா? படத்தின் மிக முக்கியமான ஆவி சமாச்சாரத்திற்கு மிக மிக எடுப்பான பின்னணி இசையமைத்து தந்திருக்கிறார். மிரட்டல்!

எல்லாம் சரி. அந்த க்ளைமாக்சில் வரும் ரேப் காட்சியில் அவ்வளவு நீளம் தேவையா? அருவருப்! அதுவரை படம் பார்த்த குழந்தைகள் கூட அந்த காட்சி வரும்போது ‘போலாம்ப்பா…’ என்று தொணப்புவது நிஜம்.

மற்றபடி இந்த டார்லிங்? ஒரே டம்பக்குதான்!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
எ.அ, கா.ச. இரண்டும் ஒரே கதையா? கவுதம்மேனனிடம் போனில் பேசிய தனுஷ்!

கோட் சூட் கோபிநாத் மீது கொலை வெறியோடு இருக்கிறது மருத்துவர்கள் வட்டாரம். தேவையில்லாமல் மக்களின் பணத்தை பிடுங்குவதாக அவர் மருத்துவர்களை குற்றம் சாட்டியதால் வந்த கோபம் இது....

Close