குலேபகாவலி விமர்சனம்

ரப்பர் மனுஷன் பிரபுதேவாவின் தமிழ்ப்பட மார்க்கெட் மீது ஆவியை ஏவி விட்டால் கூட மன்னித்திருக்கலாம். குலேபகா‘வலி’யை ஏவி விட்டிருக்கிறார்கள். ஒரு கும்பல் புதையலை தேடிப் போவதுதான் கதை. புதையலுக்கு அலைந்த நேரத்தில், புதுசாக ஏதாவது கதை கிடைக்குமா என்று அலைந்திருந்தால் ஐயோ பாவம்… மாஸ்டரின் மார்க்கெட்டில் மரியாதைக்கு ‘டேமேஜ்’ இல்லாமலிருந்திருக்கும்.

வெள்ளைக்காரனிடம் கொள்ளையடித்த வைரத்தையெல்லாம் ஓரிடத்தில் புதைத்து வைத்திருக்கிற தாத்தா ஒருவரின் வாரிசுதான் மதுசூதனன். சாகிற தருவாயில் உண்மையை சொல்லிவிட்டு இறக்கும் அப்பாவை நம்பி, புதையல் எடுக்க ஆட்களை அனுப்புகிறார் மது. அவர்களில் இருவர்தான் பிரபுதேவாவும் ஹன்சிகாவும். நடுவில் ரேவதியும் சேர்ந்து கொள்ள, புதையல் கிடைத்ததா? இல்லையா? பொறுமையை சோதித்து அனுப்புகிறார் டைரக்டர் எஸ்.கல்யாண். படம் முழுக்க எல்லாருமே காட்டுக் கூச்சல் போடுவதால், பஞ்சோடு போவது காதுகளுக்கு நல்லது.

‘தேவி’யில் பார்த்த பிரபுதேவாவுக்கும், ‘பகாவலி’ பிரபுதேவாவுக்கும் குறைந்த பட்சம் ஆறேழு வித்தியாசங்கள் இருக்கிறது. முக்கியமாக மிஸ்சாகியிருப்பது முக மலர்ச்சி. ஆனால் தூக்கத்தில் எழுப்பி ஸ்டெப் போடச் சொன்னாலும் பிசகாமல் போட்டுத்தள்ளும் அவரது டான்ஸ்சில் மட்டும் அவ்வளவு புத்துணர்ச்சி. பெரும் சுமை இன்னொன்று. படம் முழுக்க அவர் காமெடி செய்து கொண்டேயிருக்க வேண்டும். அங்குதான் திணறித் தீர்க்கிறார் மாஸ்டர்.

ஹன்சிகாவுக்கு என்ன கவலையோ?இளைத்து நூலாகிவிட்டார். ‘இஞ்சி இளைத்தால் கஞ்சிக்கும் தேறாது’ என்பதை போல, இவர் இளைத்தது எல்லா பிரேமுக்கும் மைனஸ். இந்த லட்சணத்தில் இவரை நள்ளிரவில் அம்மணமாக ஓட விடுகிறது ஊர். கிழக்கே போகும் ரயில் ரிலீசாகி முப்பது வருஷமாச்சு. இன்னும் அந்த நிர்வாண பெப், போகவில்லையோ சினிமாவுக்கு?

படத்தில் முக்கிய ரோலை கைப்பற்றியிருக்கிறார் முன்னாள் ஹீரோயின் ரேவதி. குளோஸ் அப்பில் மட்டும் பதற வைக்கும் ரேவதி, நடிப்பிலும் நகைச்சுவையிலும் நன்றாகவே தேறியிருக்கிறார். இருந்தாலும், அந்த கேரக்டரை இன்னொரு நடிகைக்கு வழங்கியிருந்தால், கைதட்டி கொண்டாடியிருக்கலாம்.

ராமதாஸ், ஆனந்தராஜ், சத்யன், மொட்டை ராஜேந்திரன், மன்சூரலிகான் என்று தினப்படி நடிகர்களின் ராஜ்ஜியம்தான் படம் முழுக்க. ஒரு அடி முன்னேறவில்லை நகைச்சுவை!

விவேக் மெர்வின் இசையில், சில பாடல்கள் பிரபுதேவாவின் டான்ஸ்சுக்காகவே போட்டது போல செம துள்ளல். பின்னணி இசையும் நன்றாகவே இருக்கிறது.

‘இனிமே டைரக்ஷன் பண்றேன்ப்பா..’ என்று போனவரை, இழுத்துப்பிடித்து இஞ்சி மரபா கொடுக்கிறீங்களே…? குலேபகாவலி கோவிலில் சபதம் எடுத்தாவது டைரக்ஷன் பக்கம் போங்க மாஸ்டர்!

இந்த வலிக்கு அந்த வலியை கூட பொறுத்துக் கொள்ளலாம்…!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
Thaanaa Serndha Koottam Review – Valai pechu

https://www.youtube.com/watch?v=-YWMGqEGN7A

Close