நிருபரை மிரட்டினாரா பாண்டிராஜ்?

இதுவரையில்லாத ஒரு புதிய முகத்தோடு எட்டிப் பார்த்திருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ். ‘பசங்க’ காலத்திலிருந்தே பத்திரிகையாளர்களுக்கும் பாண்டிராஜுக்குமான உறவு மிக மிக இலகுவாகவே இருந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, பத்திரிகையாளர்கள் நினைத்த நேரத்தில் தொடர்பு கொள்ளக் கூடிய தொலைவில் இருப்பவர் அவர். ‘இது நம்ம ஆளு படம்’ தொடர்பான பிரச்சனைகளின் போதெல்லாம், பாண்டிராஜுக்கு சாதகமாகவே செய்திகளை வெளியிட்டு வந்திருக்கிறார்கள் பத்திரிகையாளர்களும். அப்படிப்பட்ட நிலையில் தமிழ்சினிமா நிருபர்களில் மிக முக்கியமான நிருபரான ராஜீவ்காந்தியை அவர் போனில் மிரட்டியதாக வந்த தகவல் கேட்டு ஆடித்தான் போனோம்.

கிள்ளினால் கூட அதை தோளில் கை போட்டுக் கொண்டே செய்யும் உரிமையிலிருக்கும் பாண்டிராஜ் ஏன் இப்படி செய்தார் என்பது ஆச்சர்யமாகதான் இருக்கிறது. என்ன? ஏது? என்பதையெல்லாம் அலசி ஆராய்வது முக்கியமல்ல. பாண்டிராஜ் தன்னுடன் பேசியது குறித்து ராஜீவ்காந்தி தன் முகப்புத்தகத்தில் எழுதியிருக்கும் விஷயம், அப்படியே வாசகர்களின் பார்வைக்கு-

மதியம் இயக்குனர் பாண்டியராஜிடம் இருந்து ஒரு ஃபோன். போன வார குமுதத்தில் என்னை பற்றி ஒரு கிசுகிசு வந்துருக்கு. கொடுத்தது நீ தான்னு உங்க ஆபிஸ்லயே சொல்லிட்டாங்க… கன்ஃபார்ம் பண்ணிட்டு தான் கேட்கிறேன் என ஆரம்பித்தார். இதுபோன்ற ஆட்களை டீல் செய்வது வாடிக்கை தானே… என பேசிக்கொண்டிருந்தபோதே… “நீ யாருனு எனக்கு தெரியும்… எல்லாத்தையும் நான் வெளில சொல்லவா?” என வாயை விட்டார். அடடா நமக்கே தெரியாம நமக்குள்ள ஒரு அன்னியன் இருக்கான் போல… என ’சொல்லுங்கண்ணே…’ என்றேன். அவர் சொன்ன குற்றசாட்டுகளுக்கு விளக்கம் கொடுத்துவிட்டு உன்னால என்ன புடுங்க முடியுமோ புடுங்கிக்கோ.. என சொல்லியாயிற்று…

1. விகடனை விட்டு உன்னை ஏன் தூக்கினார்கள் என்பது தெரியும்

விகடனில் நான் விலகல் கடிதம் கொடுத்தது குமுதத்தில் அதிக சம்பளம் (இரண்டு மடங்கு)+ முதன்மை நிருபர் பதவி இரண்டுக்காக தான். கடிதம் கொடுக்கும் வரையிலும் விகடனில் இருந்தவர்களுக்கு நான் விலக போகிறேன் என தெரியாது. நான் மனம் மாறுவேன் என மூன்று நாட்கள் காத்திருந்தார்கள். ஆனால் நான் உறுதியாக இருந்ததால்தான் விட்டார்கள். என்னை தலைமை நிருபராக்கிய அடுத்த மாதமே நான் விலகினேன்.

2. ஒண்ணுமே இல்லாத சிவகார்த்திகேயனை நீ ரஜினி ரேஞ்சுக்கு எழுத எவ்வளவு பணம் சிவா மேனேஜர் ராஜாகிட்ட வாங்குறேன்னு தெரியும்.

உனக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன பிரச்னைனு எனக்கு தெரியாது. ஆனா சிவகார்த்திகேயன்னு இல்லை, எவனாவது வந்து நான் பத்து பைசா காசாவோ, வேற பொருளாவோ வாங்கினேன்னு சொல்லட்டும். நான் பத்திரிகை உலகத்தை விட்டே போய்டறேன். ஒரு ஆடியோ ஃபங்ஷனில் ஆடியோ சிடி இருந்த பிரஸ் ரிலீஸ் பேக்கில் ஒரு மொபைல் இருந்தது. அதை அப்படியே அலுவலகத்தில் சமர்ப்பித்தவன் நான். எனக்கு கிடைத்த எல்லாவற்றுக்குமே இந்த நேர்மை தான் காரணம் என்று அதனை விடாப்பிடியாக கடைப்பிடிப்பவன் நான். இது எனது நண்பர்களுக்கு மட்டுமல்ல எதிரிகளுக்கும்(அப்படி யாரும் இருந்தால்) தெரியும்.

3. நீ திருச்சியில என்ன செஞ்சுகிட்டு இருந்தேன்னு தெரியும்

பாட்ஷா லெவலுக்கு எதிர்பார்த்தா ஸாரி பாஸ்.. திருச்சியில நான் பிஎல் படிச்சுட்டு இருந்தேன். காலேஜ் + மெடிக்கல் ரெப் வேலை + விகடனில் ஸ்டூடண்ட் ரிப்போர்ட்டர்னு வேலையை பார்க்கவே டைம் இருக்காது. இதுல வேற என்ன பண்ணியிருக்க போறேன்?

4. ஒரு நாள் விஷாலை பார்க்க என் ஷூட்டிங்குக்கு தண்ணியடிச்சுட்டு வந்தே…

இதெல்லாம் பழைய ஸ்டைல் குற்றசாட்டு பிரதர். நான்லாம் தண்ணியடிச்சுட்டு சுத்துற அளவுக்கு ரெகுலர் குடிகாரன் கிடையாது. எப்பவாவது தான். அதுலயும் லிமிட் ஒரு பியர் தான். அது முடியுறதுக்கு முன்னாடியே என் கண்களை மயக்க பூச்சி கடிச்சுடும். இது என் நண்பர்களுக்கு நல்லா தெரியும். பகல்ல அடிச்சதே கிடையாது.

இயக்குனர் பாண்டிராஜ் அவர்களே… எங்க ஆபிஸுக்கு வர்றேன்னு சொல்லியிருக்கீங்க… ஐ அம் வெய்ட்டிங். எல்லாத்தையும் நிரூபிக்க போறேன்னு சொல்லியிருக்கீங்க… இதுல ஒண்ணை நிரூபிச்சா கூட நான் மீடியாவை விட்டே போய்டறேன்… அரிய வாய்ப்பு இது. (ஃபோன்ல எனக்கு ரெக்கார்ட் ஆகக்கூடாதுகற ஆப்ஷனை பயன்படுத்தி மிரட்டுற பயந்தாங்கொள்ளி உனக்காகல்லாம் ஸ்டேட்டஸ் போடறோமேன்னு தான் வருத்தமா இருக்கு) அப்படி நிரூபிக்கலைன்னா ஒண்ணும் பிரச்னை இல்லை. ஏன்னா இதுபோல அபாண்டங்களை சுமத்துற ஆட்களை சந்திப்பது என் கேரியர்ல புதுசு இல்லை.

இவ்வாறு கூறியிருக்கிறார் ராஜீவ்காந்தி

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
ரஜினி படத்தின் பெயர் கபாலி! அதே தலைப்பில் வேறொரு படம்? நம்ம ஃபீல்டுக்கு என்னதான் ஆச்சு?

வட சென்னை பகுதிகளில் தெருவுக்கு ரெண்டு கபாலியாவது இருப்பார்கள். இனி மேற்படி கபாலிகளுக்கெல்லாம் நல்ல நேரம்தான்! ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் கபாலி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது....

Close