கல்கண்டு- விமர்சனம்

பெரிய வீட்டு பிள்ளைகள் அறிமுகமாகும்போதெல்லாம் கிழக்கில் ஸ்டார் முளைக்கும் என்ற நம்பிக்கையோடு வானத்தை பார்ப்பார்கள் ரசிகர்கள். ஆனால், அங்கு பல நேரம் பீஸ் போன பல்புகள்தான் பல்லை காட்டும். முன்னணி நடிகர்கள், முன்னணி நடிகைகள், முன்னணி இசையமைப்பாளர்கள், முன்னணி இயக்குனர்கள் என்று வீட்டுக்கு ஒரு வாரிசு இப்படியொரு கனவோடு கிளம்பும். இந்த முறை நாகேஷின் பேரன் கஜேஷ் வந்திருக்கிறார்!

பல்பா? ஸ்டாரா? இன்னும் நாலு படம் போகட்டும்… (அதனால் ரிசல்ட் மறு தேதியின்றி ஒத்தி வைக்கப்படுகிறது).

கண்டிப்பான வாத்தியாருக்கு, மக்கு பிள்ளையாக வந்து சேர்கிறார் காஜேஷ். பெரிய பிள்ளையை அமெரிக்காவில் டாக்டருக்கு படிக்க வைக்கணும். சின்ன பிள்ளையை லண்டனில் டாக்டருக்கு படிக்க வைக்கணும். இதுதான் அந்த வாத்தியார் அப்பாவின் ஆசை. அண்ணன் அகில் அப்பாவின் கனவை நனவாக்கிவிடுகிறார். தம்பி காஜேஷ் என்ன செய்கிறார்? ப்ளஸ் டூ வையே முக்கி முக்கி முடிக்கும் அவர், அரசியல்வாதி ஒருவரிடம் ஐம்பது லட்சத்தை கொடுத்து மெடிக்கல் சீட் வாங்குகிறார். (அந்த ஐம்பது லட்சம் அப்பாவுக்கு தெரியாமல் அண்ணன் அகில் கொடுத்தது) ஆனால் கார்த்திக் .ஏ என்கிற பெயரை கார்த்திகா என்று தவறுதலாக எழுதிக் கொடுப்பதுடன் அப்ளிகேஷன் நம்பரையும் மாற்றி எழுதிக் கொடுத்துவிட, இவருக்கு வர வேண்டிய சீட், வேறொரு பெண்ணுக்கு போய்விடுகிறது.

இருந்தாலும், டாக்டருக்கு படிப்பதாக பொய் சொல்லிவிட்டு சென்னைக்கு வருகிறார். வந்த இடத்தில் தனக்கு கிடைக்க வேண்டிய சீட்டில் படித்துக் கொண்டிருக்கும் ஹீரோயின் டிம்பிளை சந்திக்கிறார். இவர் விரட்டி விரட்டி காதலிக்க, படிப்பு முடிகிற வரைக்கும் தொந்தரவை சமாளிப்போம் என்று டிம்பிளும் காதலிப்பதை போல நடிக்கிறார். கடைசிநாளில் சொல்லாமல் கொள்ளாமல் சொந்த ஊருக்கு போய்விடும் டிம்பிளை தேடி ஊர் ஊராக திரிகிறார் காஜேஷ். இருவரும் சந்தித்தார்களா? டிம்பிள் காஜேஷை ஏற்றுக் கொண்டாரா? பொய் சொன்ன மகனை அப்பா என்ன செய்தார்? க்ளைமாக்ஸ்.

படத்தின் முதல் காட்சியே கஞ்சா கருப்பின் வசனத்தோடு துவங்குகிறது. அப்படியொரு கட்டையில போற ஸ்லாங்குடன் அவர் பேச துவங்கும்போதே, ‘கடவுளே… சீன் மாத்து’ என்று கதறத் தோன்றுகிறது. இந்த இம்சையை புரிந்து கொள்ளாமல் படம் நெடுகிலும் கருப்புவை நடிக்கவிட்டு வெறியேற்றுகிறார் இயக்குனர் நந்தகுமார்.

ஆனந்தபாபு அறிமுகமானபோது அவரை எப்படி பார்த்தோமோ, அப்படியே இருக்கிறார் காஜேஷ். நவரசங்களை பிழிய முற்பட்டாலும், அதில் நாலைந்து குறைந்து சிங்கிள் ரசமே மிஞ்சுகிறது. ஐம்பது லட்சத்தை சுளையாக பறிகொடுத்துவிட்டு, சென்னையில் திரியும் காஜேஷ், முதல் வேலையாக டிம்பிளை சந்தித்து தன் பிரச்சனையை சொல்லியிருக்கலாமே? ஆனால் காதல் குறும்புகளில் சற்றே ஆறுதல் அளிக்கிறார் காஜேஷ். அதுவும், ஊரில் தனக்கு வைத்துத்தரும் கட்டாய கிளினிக்கில் அவர் பேஷண்டுகளுக்கு மருந்து எழுதி தரும் ஸ்டைலை நினைத்து நினைத்து சிரிக்கலாம்.

டிம்பிள், ஒரு ஜாடையில் தமன்னா போலவேயிருக்கிறார். நடிப்பு? அவரை விட இவர் தேவலாம். க்ளைமாக்ஸ் வரைக்கும் காஜேஷை விரட்டியடித்துவிட்டு, கடைசி அஞ்சு நிமிஷத்தில் இவர் காதல் வயப்படுவதெல்லாம் லுல்லுல்லாயி. இவருக்கு தோழியாக நடித்திருக்கும் அந்த ‘ட்ரம்’ இப்படியே தொடர்ந்து நடித்தால் விரைவில் கோவை சரளா இடத்தை கூட பிடித்துவிடலாம். முயலுங்க மேடம்!

வழக்கமாக அமெரிக்க மாப்பிள்ளைகளுக்கென்றே கோடம்பாக்கத்தில் சொந்தமாக கோட் சூட் வைத்திருக்கும் ஆசாமிகள் சிலர் சிக்குவார்கள். இந்த முறை பல படங்களில் ஹீரோவாக நடித்த அகில் சிக்கியிருக்கிறார். அங்கொன்றும் இங்கொன்றுமாக வந்து போனாலும், படத்தில் இவருக்கு முக்கியமான கேரக்டர். மணவறை வரைக்கும் பதற்றம் தந்து, மாலை மாற்றுகிற நேரத்தில் மாப்பிள்ளையை மாற்றுகிற கிளிஷே இப்படத்திலும் உண்டு. பட்… கொஞ்சம் சிரிக்க சிரிக்க சொல்லியிருக்கிறார் இயக்குனர் நந்தகுமார். அந்த சேசிங் கலகலப்பு படத்தை நினைவூட்டினாலும், சிரிக்க வைத்த புண்ணியத்திற்காக பிடிங்க ஒரு கைதட்டல்!

இந்த படத்திலும் மயில்சாமி குடிகாரர்தான். கொடுத்த சரக்குக்கு குந்தகம் இல்லாமல் நடித்திருக்கிறார். சேசிங்கில் அவரவர் ஓடிக் கொண்டிருக்க, இவர் ஒரு டிராக்கில் ஓடுவதை மறுபடி நினைத்தால் கூட வயிறு சின்னாபின்னமாகிறது.

கண்ணனின் இசையில் சில பாடல்கள் கேட்கலாம்.

‘பிள்ளைகளின் விருப்பப்படி படிக்க வைங்க. உங்க எண்ணத்தை அவங்க மேல திணிக்க வேண்டாம்’ என்பதுதான் இந்த படத்தின் மெசெஜ். கல்கண்டுன்னு ஆசையா வாயை திறந்தா…. கல் ப்ளஸ் கண்டுவை உள்ளே போடுகிறார்கள். இனிமே வாட்ஸ் அப்ல கூட மெசேஜ் வேணாம் தலைவா!

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
குட் புக்குல எதுக்கு கோடு கிழிக்கிறீங்க விஜய் சேதுபதி?

அட... விஜய் சேதுபதி நல்லவரு, வல்லவருன்னு எழுதி இங்க் காயல. அதுக்குள்ளே இப்படியொரு செய்தியா? என்ன பண்ணுறது? சினிமாவுலதான் கொடை ராட்டினம் குப்புறவும் தள்ளும். வானத்தையும் இடிக்க...

Close