நெடுமாறன், வைகோவை சந்திக்க லைக்கா சுபாஷ்கரண் முடிவு! அதற்கப்புறம்தான் கத்தி பாடல்கள்?
கத்தி தனக்கு கூர் தீட்டிக் கொண்டது போக, இப்போது கத்தியையே போட்டுத் தள்ளுவதற்காக கூர் தீட்டிக் கொண்டிருக்கிறது சுற்று சூழல்! விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் ‘கத்தி’ படத்தின் வெளியீட்டு தேதி நெருங்க நெருங்க அது பற்றிய பரபரப்புகளும் ஆரம்பமாகிவிட்டது. ‘விட்டேனா பார்’ என்று கத்தி படத்திற்கு எதிராக கிளம்பியிருக்கும் அவ்வளவு பேரும் சாதாரணமானவர்கள் அல்ல. தனக்கு பின்னால் பெரும் இன உணர்வாளர்களை உள்ளடக்கிய பெரும் போராட்டக் காரர்கள்.
ராஜபக்சேவின் நண்பரும் பிசினஸ் பார்ட்னருமான சுபாஷ்கரண் என்பவர்தான் இந்த படத்தின் உண்மையான தயாரிப்பாளர். இவர் லண்டனில் லைக்கா மொபைல் நிறுவன அதிபராக இருக்கிறார். இந்த லைக்கா நிறுவனம்தான் கத்தி படத்தை தயாரிக்கிறது என்றெல்லாம் செய்திகள் பரவி வருகிறது. ஆனால் தனக்கும் ராஜபக்சேவுக்கும் அவரது தம்பிக்கும் எவ்வித தொழில் தொடர்பும் இல்லை என்று தொடர்ந்து கூறிவருகிறார் சுபாஷ்கரண். அவருடன் கூட்டு சேர்ந்து இப்படத்தை தயாரித்து வரும் லண்டன் கருணாசும் இதையே ஆமோதிக்கிறார்.
சென்னையில் ஆந்திரா கிளப்புக்கு எதிரிலிருக்கும் லைக்கா நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவிருப்பதாக கத்தி எதிர்ப்பு குழுவினர் திட்டம் தீட்டிக் கொண்டிருக்க, சம்பந்தப்பட்ட போராட்டக் குழுவினரை நேரில் சந்தித்து விளக்கமளிக்க இருக்கிறாராம் சுபாஷ் கரண். ஆகஸ்ட் மத்தியில் வைகோ, நெடுமாறன், சீமான், உள்ளிட்ட பல்வேறு முக்கிய தலைவர்களை சந்திக்கவும் திட்டமிட்டிருக்கிறார் அவர்.
இந்த சந்திப்பு முழுமை பெற்ற பின்புதான் கத்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவே நடக்கும் என்கிறது தற்போதைய தகவல்கள். ‘அதுவரை இந்த படம் தொடர்பான எந்த விதமான பிரமோஷன்களுக்கும் தான் வரப்போவதில்லை’ என்று கூறியிருக்கிறாராம் விஜய்.