சிக்கலில் மீகாமன்? ஆர்யா விட்டுக் கொடுத்த ஆறு கோடி!
‘ஆஹா… இவரல்லவோ ஹீரோ’ என்கிற பாராட்டை அவ்வப்போது தட்டிக் கொண்டு போவதில் ஆர்யாவுக்கு நிகர் ஆர்யாவே! ‘சம்பள பாக்கியை இப்பவே வச்சாவணும். இல்லேன்னா படம் வெளியில வர்றதுக்கு நானே முட்டுக்கட்டை போட்ருவேன்’ என்று பல ஹீரோக்கள் பலம் காட்டுவது கோடம்பாக்கத்தின் சாபக்கேடு. இதையெல்லாம் சமாளித்துதான் ரத்தக்கண்ணீர் வடித்து படத்தை வெளிக் கொண்டு வருகிறார்கள் ஒவ்வொரு தயாரிப்பாளரும். மீகாமன் தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக்குக்கும் அப்படியொரு நிலை.
மதுரை பிரமுகர் ஒருவர் கடனுக்காக மீகாமன் வெளியீட்டை தடுக்க முயல்வதாக தகவல். ஆறு கோடியை எண்ணி வைத்தால்தான் படம் வெளியாகும் என்கிற சூழ்நிலை. இந்த இக்கட்டான நேரத்தில் தன்னுடைய மூன்று கோடி ரூபாய் சம்பளத்தை விட்டுக் கொடுத்த ஆர்யா, மேலும் மூன்று கோடியை புரட்டிக் கொடுத்தாராம். இதனால் குத்துயிரும் குலையுயிருமாக தவித்துக் கொண்டிருந்த ‘மீகாமன்’ தடங்கல் இல்லாமல் வெளிவந்துவிடும் என்கிறார்கள்.
வெள்ளத்துல போற தயாரிப்பாளருக்கு, கரையில நின்னுகிட்டே பள்ளத்தை நோக்கி வழிகாட்டும் வள்ளல் நடிகர்களே… ஆர்யாவிடம் போய் ஆறு மாசம் ட்யூஷன் படிங்கப்பா…!