பத்மஸ்ரீ வேணாம்… படம் கொடுங்க! மெல்லிசை மன்னரின் சோகம்
எத்தனையோ இசை மேதைகள் இந்த மண்ணில் பிறந்தாலும், யாரோ ஒரு சிலர்தான் நம் இதயம் வரைக்கும் படியேறி வருகிறார்கள். அப்படி எண்பதுகளின் ராஜாவாக இளையராஜாவும், எழுபதுகளின் மகாராஜாவாக எம்.எஸ்.வியும் இருக்கிறார்கள். ஒலி அலைகள் காற்றில் கலந்திருக்கும் வரை, இவர்களின் வித்தைகளும் காற்றோடு காற்றாக கலந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
இவ்வளவு உயரத்திலிருக்கிற இம்மேதைகளுக்கு இந்தியாவும் அரசும் முறையான கவுரவத்தை அளித்திருக்கிறதா என்றால் அதுதான் இல்லை. சமீபத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியை சந்தித்தார் அந்த வெள்ளையுடை பிரபலம். ‘அண்ணே… உங்களுக்கு இன்னும் பத்மஸ்ரீ விருது கிடைக்கலே. ரொம்ப வருத்தமா இருக்கு’ என்று இவர் சொல்ல, அதற்கு எம்.எஸ்.வி சொன்ன பதில்தான் யதார்த்தம்.
‘பத்மஸ்ரீயெல்லாம் எதுக்குங்க? படம் கொடுக்க சொல்லுங்க. இப்ப படம் பண்ணிட்டு இருக்கிற யாராவது என்னை இசையமைக்க கூப்பிட்டா அதுதான் எனக்கு பத்மஸ்ரீ விருது. ஏதோ இசை என் உடம்புல இன்னும் கிடந்து தவிச்சுகிட்டு இருக்கு. ஒண்ணு ரெண்டு படம் கிடைச்சா அந்த மிச்சம் மீதியையும் இறக்கி வச்சுட்டு போயிருவேன்’ என்று கூறியிருக்கிறார் வருத்தத்தோடு.
அண்டா குண்டான் குவளையை உருட்டுவதுதான் இப்போது இசை என்றாகிவிட்டது. இந்த பேய் உருட்டலே நல்ல இசை என்று ரசிக்கப்படும் காலத்தில் இந்த மெல்லிசையின் ராஜாவுக்கு யாரால் பதில் சொல்ல முடியும்?