நயன்தாரா பயமுறுத்தினால் எப்படியிருக்கும்?
விஷால் ஹீரோவாக நடித்த ‘சத்யம்’ திரைப்படத்தில் நயன்தாராவுக்கும் சின்ன சின்ன வாண்டுகளுக்கும் நடுவில் ஒரு ‘வார்’ நடக்கும். நயனை ஒரு மிக்கி மவுஸ் ரேஞ்சுக்கு குறி வைத்து தாக்குவார்கள் அந்த வாண்டுகள். அப்போது கிச்சனில் சிக்கிக் கொள்ளும் நயன்தாரா, அங்கிருக்கும் மைதா மாவெல்லாம் தலையில் கொட்டி, அப்படியே கண்ணாடியில் தன்னை பார்த்து ‘குய்யோ முறையோ’ என்று கூச்சல் போடுவார். தன்னை ‘பயங்கரமாக’ கற்பனை செய்து கொண்டுதான் அவ்வாறு கதறுவார். ஆனால், அந்த காட்சியில் இன்னும் அழகாயிருக்காரே… என்கிற வியப்பு விழிகளோடுதான் பார்த்தது ரசிகர் கூட்டம்.
நயன்தாரா எவ்வளவு டெரராக வந்தாலும், ரசிகர்கள் அவரை சிம்புவின் கண்கள் வழியேதான் பார்ப்பார்கள் என்பது ஊரறிந்த ரகசியம். நிலைமை இப்படியிருக்க, நயன்தாராவை பேயாக நடிக்க வைக்கப் போகிறார்களாம் ஒரு படத்தில். இந்த படம் முழுக்க முழுக்க ஹாரர் டைப் படம். அதில் தனியொரு ஹீரோயினாக நின்று பேயாட்டம் ஆடப் போகிறார் நயன்தாரா. பேருக்கு ஒரு ஹீரோ இருக்கிறார் படத்தில். மற்றபடி எல்லாமே நயன்தாராதானாம்.
இப்போது பேய் படங்கள்தான் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கும் இந்த காமெடி ட்ரென்ட், இப்போது பேய் ஆவி சமாச்சாரங்களுடன் மிக்ஸ் ஆகி கலகலப்பும் திகிலும் ஊட்டுவதால், இந்த புதிய பாணியை ஆளாளுக்கு கையில் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு காரணம், காஞ்சனா, பீட்சா, யாமிருக்க பயமே போன்ற படங்களின் கலெக்ஷன்தான். அதன் தொடர்ச்சியாக இப்போது நயன்தாராவையும் பேயாக்கி உலவ விடப் போகிறார்கள்.
நயன்தாரா பேயாக வந்தால், ‘எங்கே கொல்லுங்க பார்க்கலாம்’ என்று கழுத்து, காது இன்னபிற உறுப்புகளை கொடுத்துவிட்டு பிரேமுக்குள் படமாக தொங்கவும் தயாராக இருக்கிறார்கள் ரசிகர்கள். வாம்மா மின்னலு….!