ஆமா… ஒருத்தர் மிரட்றாரு! உத்தமவில்லன் சர்ச்சையில் தயாரிப்பாளர் லிங்குசாமி ஒப்புதல்!
கமல் படங்களுக்கு இது புதுசல்ல. முன்பெல்லாம் திரையுலகத்திற்கு வெளியே இருந்துதான் அவருக்கு பிரச்சனை வரும். இப்போது திரையுலகத்திற்கு உள்ளேயிருந்தே பிரச்சனை என்று கேள்வி! மே 1 ந் தேதி திட்டமிட்டபடி ‘உத்தமவில்லன்’ படம் வருமா? வராதா? என்றெல்லாம் ரசிகர்களே குழம்புகிற அளவுக்கு இந்த பிரச்சனை சாதாரண பொதுமக்கள் வரைக்கும் சென்று சேர்ந்ததால், ‘கொம்பன்’ படத்திற்கு ஆதரவாக தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு தலைமையில் எப்படி திரையுலக அமைப்புகள் ஒன்று திரண்டனவோ? அதற்கும் சற்றும் குறைவில்லாமல் திரண்டது இப்போதும்.
உத்தமவில்லன் பிரச்சனையில்லாமல் வர வேண்டும் என்றால் எனக்கு இவ்வளவு பணம் வேண்டும் என்று ஒரு நபர் மிரட்டுவதாக அந்த கூட்டத்திலேயே ஒப்புக் கொண்டார் தயாரிப்பாளர் லிங்குசாமி. ஆனால் அந்த நபர் யாரென்பதை அவர் வெளிப்படையாக ஒப்புக் கொள்ளவில்லை.
அதிகபட்சம் ஏழு நிமிடங்களே நீடித்த இந்த பத்திரிகையாளர் சந்திப்பில், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் தாணு, திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன், பிரபல பைனான்சியர், தயாரிப்பாளர், விநியோகஸ்தரான மதுரை அன்புச்செழியன் இவர்களுடன் முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவர் கேயார் உள்ளிட்ட திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.
பத்திரிகையாளர்களிடம் அழுத்தம் திருத்தமாக பேசிய தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு, மே 1 ந் தேதி உத்தமவில்லன் திரைப்படம் திட்டமிட்டபடி வெளிவரும். அதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறிவிட்டு கூட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். வெளியே கசிந்த புரளிகளை வைத்து, உத்தமவில்லனுக்கு எதிராக கருத்து பரப்பி வந்த கருத்து கந்தசாமிகளுக்கு இந்த பதில் ‘மவுத் லாக்’ போட்டிருக்கும்!