தலைவர் சொல்றதை நம்புறதா வேணாமா? தலைமைக்கு போன் அடிக்கும் ரசிகர்கள்!
“முக அடையாளம் கூட முக்கியமில்லே. ஆள் காட்டி விரலை மட்டும் அமுக்கு!” என்று பரபரப்பாகி திரிகிறது எல்லா அரசியல் கட்சிகளும். இங்கு வாக்கு வங்கியை கணிசமாக வைத்திருக்கும் விஜய் ரசிகர்களை விட்டு வைக்குமா? ஆசைப்பட்ட எல்லாத்தையும் அடுக்கடுக்கா தர்றோம். அண்ணனுக்கு சப்போர்ட் பண்ணுங்க என்று ஊர் ஊராக வளைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதில் முக்கால்வாசி பேர் திமுக தலைவர் கலைஞரின் படத்துடன் விஜய் படத்தையும் வைத்துக் கொண்டு தெருத் தெருவாக கிளம்ப, வம்புல மாட்டி விட்ருவாய்ங்க போலிருக்கே என்று உஷாராகிவிட்டார் விஜய்.
உடனடியாக ஒரு அறிக்கை கொடுங்க என்று அவர் உத்தரவிட, விஜய்யின் கையெழுத்துக்கு பதிலாக வேறொரு மன்ற நிர்வாகியின் கையெழுத்தோடு பறந்தது அறிக்கை. அதில் யாருக்கும் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆதரவு இல்லை என்று அறிவித்துவிட்டார்கள். ஆனால் விருப்பப்பட்ட கட்சிக்கு வாக்களிக்க எந்த தடையும் இல்லை. விருப்பப்பட்ட கட்சிக்கு ஓட்டு கேட்கவும் தடையில்லை என்று கூறப்பட்டிருந்தது. அதற்கப்புறம்தான் ஒரு ‘இக்கு’ வைத்தார்கள் அதில். யாரும் விஜய்யின் போட்டோவையோ, மன்றக் கொடியையோ அங்கு பயன்படுத்தக் கூடாது என்பதுதான் அது.
இவ்வளவு தெளிவாக ஸ்கெட்ச் போட்டு சொன்ன பிறகும், வெளியூர்களிலிருந்து போன் மேல் போன் வருகிறதாம் மன்ற தலைமைக்கு. அது விஜய் வெளியிட்ட அறிக்கைதானா? என்பதுதான் பலரது சந்தேகம். இது ஒருபுறம் இருக்க, “உங்க தலைவர்தான் சொல்லிட்டாரே? வாங்க வோட்டு கேட்டு போகலாம்” என்று கும்பல் கும்பலாக வளைக்க ஆரம்பித்துவிட்டார்களாம் ரசிகர்களை. இன்னும் பல பகுதிகளில் மன்ற கொடியோடு ஆளுங்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு நடை போடுகிறார்கள் விஜய்யின் கழக கண்மணிகள்.
கட்சிக்கட்டுப்பாட்டை மீறுனா என்ன நடக்கும் தெரியும்ல?