சூர்யா, ஹன்சிகா படங்கள்! வலை போட்ட ஈராஸ்!
படம் எடுப்பதென்பது பத்து மீட்டர் ஓட்டப் பந்தயம்தான். ஆனால் எடுத்த படத்தை ரிலீஸ் செய்யுற வேலை இருக்குல்ல? அதுதான் ஆயிரம் மீட்டர் ஓட்டம்! முழு ரவுண்டையும் முடிப்பதற்குள் நாக்கு தள்ளி நடு மண்டை வீங்கிவிடும். இன்று சினிமா இருக்கிற நிலைமை அப்படி. ஒரு படம் தியேட்டருக்கு வந்தால், அதில் நடித்திருப்பவர்கள் யார்? அந்த படத்தை வெளியிடும் நிறுவனம் எது? என்பதையெல்லாம் பார்த்து பார்த்துதான் டிக்கெட்டே வாங்குகிறான் ரசிகன். அதனால் படம் எடுப்பது ஒருவர், அதை வெளியிடுவது இன்னொருவர், விட்டால் அதையும்தாண்டி வேறொருவர் என்று கைமாறி கைமாறிதான் கடைசியில் ரசிகனின் கண் முன்னே பிரசன்னம் ஆகின்றன படங்கள்.
தமிழ்சினிமாவில் குறிப்பிட்ட சில கம்பெனிகள் வெளியிடும் படங்களுக்கு மட்டும் செம ஓப்பனிங் அமைகிறது. “அவங்களே ரிலீஸ் பண்றாங்கன்னா, அந்தப்படம் நல்லாதான் இருக்கும்” என்றொரு நம்பிக்கை ரசிகர்களிடம் வந்திருக்கிறது. இதில் பல எதிர்பார்ப்புகள் பப்பரக்கா ஆகிவிடுவதும் உண்டு. இருந்தாலும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்தான் இப்போது மட்டுமல்ல, எப்போதும் ராஜா! அதில் ஒன்றுதான் ஈராஸ். தமிழ்சினிமாவின் டாப் ஹீரோக்களின் படங்களை வெளியிடுகிற நிறுவனம் அது.
இந்த நிறுவனம் சமீபத்தில் சூர்யா நடித்த 24 என்ற படத்தையும், ஹன்சிகா நடித்த உயிரே உயிரே என்ற படத்தையும் வாங்கியிருக்கிறது. 24 படம் பேய் பட வரிசையில் அமைந்தது. ஆனால் ஹன்சிகா நடித்திருக்கும் உயிரே உயிரே, நத்திங் பட் லவ்! தமிழ்சினிமாவில் முழு காதல் படம் வந்து அநேக வருஷங்கள் ஆகிவிட்டன. ஒன்று காதலில் ஆக்ஷனும் ஒட்டியிருக்கும். இல்லையென்றால் பேய் பிசாசு ஆவி பில்லி சூனியங்கள் ஒட்டிக் கொண்டிருக்கும். ஆனால் நூறு சதவீத லவ் படமாக உருவாகியிருக்கிறதாம் ஹன்சிகாவின் உயிரே உயிரே.
இப்படத்தை ஒரு காலத்தில் ஹன்சிகாவைப் போல ஆயிரம் மடங்கு அழகியாக இருந்து, தமிழர்களை பித்துப்பிடிக்க வைத்த நடிகை ஜெயப்ரதா தயாரித்திருக்கிறார். அவரது மகன் சித்து ஹன்சிகாவுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ராஜசேகர் இயக்கியிருக்கிறார். தமிழ் நாட்டில் மட்டும் சுமார் 450 தியேட்டர்களில் வெளியிட பிளான் போட்டு வருகிறதாம் ஈராஸ்.
காதலை நம்பினோர் கைவிடப்படார்!