துச்சாதன்களே…. உங்கள் வேட்டிகள் பத்திரம்!

அம்மாவின் பக்தர்களை மட்டுமல்ல… அதிமுகவின் தொண்டர்களை மட்டுமல்ல… ஆயிரக்கணக்கான நடுநிலையாளர்களை மட்டுமல்ல… அம்மா உணவகத்தின் வாடிக்கையாளர்களையும் அதிர வைத்திருக்கிறது அந்த தீர்ப்பு. உணவு போட்ட அன்னலட்சுமியாக அவரை பார்த்தவர்களுக்கெல்லாம் அந்த தீர்ப்பு, சாப்பாட்டில் விழுந்த கரப்பான் பூச்சியை போல அருவறுப்பை ஏற்படுத்தியிருப்பது நிஜம்!

சிறைக்கு போகும் முதல் நாள்தான் அந்த சிறப்பு மிக்க திட்டத்தை அறிவித்துவிட்டு போனார் ஜெயலலிதா. இனி தமிழ்நாட்டில் ஒரு மூட்டை சிமெண்ட் வெறும் 190 க்கு கிடைக்கும் என்று. அதற்கு ‘அம்மா சிமெண்ட்’ என்றும் பெயரும் வைக்கப்பட்டிருந்தது. நடுத்தர மக்களின் சொந்த வீட்டு கனவில் ஒரு சின்ட்ரெல்லா போல வந்து சிரித்துவிட்டு போயிருந்தது அந்த திட்டம். அதன் முதல் மூட்டை சிமென்ட்டை அம்மாவே வழங்குவார் என்று நாடு எதிர்பார்த்திருக்கும் நேரத்தில்தான் அவரது அரசியல் எதிர்காலத்தின் மீது சிமென்ட்டை பூசி ஒரேயடியாக ஒழித்துவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு வந்திருக்கிறது அந்த தீர்ப்பு.

கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு எப்படியோ? இந்த மூன்று வருடங்களில் அம்மாவின் ஒவ்வொரு திட்டமும் தமிழ்நாட்டு சராசரி மக்களின் கன்னத்தை தடவி கொஞ்சிய விஷயங்கள். இவையெல்லாம் சேர்ந்து அவரை ‘நம்ம வீட்டு மகராசி’யாக்கியிருந்ததை மறுப்பவர் இல்லை. கட்சிக்காரர்களின் அழுகையில் நடிப்பை பார்க்க முடியவில்லை. மகளிர் அணியினரின் விசும்பல்களில் பொங்கி வழிகிறது பாசம். ‘இருந்தாலும் இது ரொம்ப அநியாயம்’ என்கிறார்கள் அதிமுக அல்லாத தாய்மார்களும் கூட! உலகத்தில் வேறெந்த தலைவருக்கும் தண்டனை வழங்கப்பட்ட பின்பு இப்படியொரு ஒட்டுமொத்த கண்ணீர் கிடைத்திருக்கிறதா என்றால், நமக்கு தெரிந்து இல்லைதான்!

அதே நேரம் இடி விழுந்த வாழை மரம் போல நிலை குலைந்து போயிருக்கிறார்கள் தொண்டர்கள். என்ன செய்யப் போகிறார் அம்மா? அவர் மீண்டும் முதல்வர் ஆகிவிடுவாரா? பூனைப்படை சூழ கம்பீரமாக அவர் நடந்து வரும் அழகை மீண்டும் பார்க்க முடியுமா? இப்படி தவிக்கும் கேள்விகளோடு கொதிக்கும் எண்ணை கொப்பரையில் நிற்கிறது தமிழ்நாட்டின் பாதி மனசு!

உப்பு தின்னா தண்ணிக்குடிச்சுதான் ஆகணும் என்கிற எதிர்கட்சி தலைவர்களின் விமர்சனங்களை கூட யாரும் சீரியசாக எடுத்துக் கொள்வதாக தெரியவில்லை. இந்த நிலையில்தான் நாலாபுறத்திலிருந்தும் ஆறுதல் அளிக்கும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன அம்மாவின் விசுவாசிகளை நோக்கி. இந்தியாவின் பிரபல வழக்கறிஞரான ராம்ஜெத்மலானி, இந்த தீர்ப்பே அநீதியானது என்று முதல் குரல் கொடுத்திருக்கிறார். நீதிபதி டி.குன்ஹாவின் தீர்ப்பு அதிகப்படியானது என்பது அவரது விமர்சனம்.

கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவருக்கு ஜாமீன் வழங்கப்படலாம். அல்லது மறுக்கப்படலாம். அப்படியிருந்தாலும் அவர் உச்சநீதிமன்றத்தை நாடலாம். இன்னும் பதினைந்து நாட்களில் அவர் இடைக்கால பிணையில் வெளியே வரலாம் என்றெல்லாம் செய்திகள் கசிந்த வண்ணம் இருக்கிறது.

அம்மாவின் மனசு எப்படியிருக்கும்? அவரது தைரியம் குலைந்து போயிருக்குமா? அல்லது முன்னிலும் வீறு கொண்டு எழுவாரா? என்ற அதிமுக வினரின் கேள்விக்கெல்லாம் மண்டையை பிய்த்துக் கொள்ள தேவையில்லை. ‘சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதில்லை’ என்ற வரிகளை எழுதியதே அதிமுக தலைவி ஜெயலலிதாவுக்காகதான்!

ஒருமுறை தொலைக்காட்சி பேட்டிக்காக ஜெயலிதாவை சந்தித்தார் டி.வி பிரபலம் ரபிபெர்னாட். எல்லா கேள்விகளும் முடிந்தது. கடைசியாக அவர் பர்சனலாக ஒரு கேள்வி கேட்க நினைத்தார். அம்மா… உங்கள் அம்மா இறந்த போது உங்களுக்கு மிக மிக இளம் வயது. சொந்தபந்தங்கள் கூட உங்களுக்கு ஆதரவாக இல்லை. அப்போது உங்கள் மனநிலை எப்படியிருந்தது? அதற்கு அவர் சொன்ன பதில்தான் இங்கே கவனிக்கத்தக்கது. முக்கியமாக அதிமுக தொண்டர்கள் கவனிக்க வேண்டியது.

‘என் கண்ணுலேர்ந்து ஒரு சொட்டு கண்ணீர் கூட வரல. நான் திடமா இருப்பேன்னு எனக்குள்ளே சொல்லிகிட்டேயிருந்தேன்’. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னால் இப்படியிருந்தவர்தான் அவர். இன்று அவருக்கு பின்னால் லட்சோப லட்சம் தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர் விரல் நீட்டினால் இமயமலையை புரட்டி வைக்கவும் துணிந்தவர்கள் அதில் பாதி பேராவது இருப்பார்கள். இந்த நேரத்தில் அவர் சிறைக்கோ, தண்டனைக்கோ அஞ்சிவிடப்போவதில்லை.

பத்தாண்டுகள் தேர்தலில் நிற்கக் கூடாது என்கிற தீர்ப்பு, சட்டத்தின் படி நியாயமாக இருந்தாலும் மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரு தலைவரை நோக்கி ஏவப்பட்டிருக்கும் இந்த தீர்ப்பு தர்மப்படி நியாயமானதல்ல! இன்னும் பத்தாண்டுகளுக்கு அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்கிறது சட்டம். தேசிய கட்சியை தமிழ்நாட்டில் வேரூன்ற விடுவதற்காக மோடி செய்த சூழ்ச்சி இது என்று வர்ணிப்பவர்களும் இருக்கிறார்கள். கலைஞர் எதை நினைத்தாரோ? அதை நடத்திக் காட்டிவிட்டார் என்று கொந்தளிப்பவர்களும் இருக்கிறார்கள். காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்திற்கு ஆதரவாக போராடிய ஜெயலலிதாவை கன்னட வெறியர்கள் சூழ்ச்சியால் பலி கொண்டு விட்டார்கள் என்று வேதனைப்படுகிறவர்களும் இருக்கிறார்கள்.

இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது. தண்டனை நியாயமானதே என்று கூறுகிற அரசியல் தலைவர்களில் கலைஞரை தவிர மீதி அத்தனை பேரும் இந்த வழக்கு நடந்து கொண்டிருந்த 18 ஆண்டுகளில் ஜெயலலிதாவுடன் தேர்தல் கூட்டணி வைத்துக் கொண்டவர்கள்தான்.

ஜெயலலிதா இல்லாத தேர்தலுக்காக துடிக்கிறது எதிர்கட்சிகளின் மனசு. அதில் வெற்றிபெற்று ஆட்சியையும் பிடித்துவிடலாம் என்பது அவர்களின் கணக்கு. அதற்காக வையாபுரியை ஹீரோவாக வைத்து எந்திரன் படத்தை எடுக்கவே முடியாது என்கிற உண்மை இவர்களுக்கு புரியுமா?

முந்தைய காலங்களில் எல்லாம் துரோகத்தையும் ஏமாற்றத்தையும் சந்தித்தவர்தான் ஜெயலலிதா. ஆனால் அவற்றுக்கெல்லாம் வட்டியும் முதலுமாக வெற்றியை அறுவடை செய்தவர் அவர். ஒரு முறை தமிழ் நாட்டில் நடந்த இடைத்தேர்தல் ஒன்றில் திமுக தலைமையிலான 14 கட்சிகள் அவருக்கு எதிராக களம் நின்றன. நீங்கள் பதினாலு பேர். நான் ஒருத்தி மட்டும்தான். பாருங்கள்… தேர்தலில் யார் மண்ணை கவ்வ போகிறார்கள் என்று? இப்படி தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கிவிட்டு வந்த ஜெயலலிதாவுக்கு வீடு வந்து சேர்வதற்குள் வெற்றி வந்து சேர்ந்திருந்தது.

யாராலும் நினைத்துப் பார்க்க முடியாததை செய்வதுதான் ஹீரோயிசம். அதையும் தாண்டியது அம்மாயிசம்!

நமது எச்சரிக்கை ஒன்றே ஒன்றுதான். துச்சாதன்களே…. உங்கள் வேட்டிகள் பத்திரம்!


Read previous post:
Whistle By Swetha Trailer

http://youtu.be/9WVFtr1NUXU

Close