மஞ்சப்பை- விமர்சனம்

மனங்களால் ஆன வாழ்க்கையை நிறங்களால் பிரிக்க கற்றுக் கொண்டிருக்கிறான் மனிதன். ‘கலர்ல என்னடா இருக்கு கருமாதி?’ என்று இதை விலக்கவும் முடியாமல், தொடரவும் முடியாமல் தவிக்கும் இதே உலகத்தில் ‘மஞ்சப்பை’ என்ற ஒரு வார்த்தையே கலரையும் ஆளையும் எடை தராசில் ஏற்றி ஒரு சேர ‘பொதுக்கடீர்’ என்று போட்டுத்தள்ளுகிறது. அப்படி காலகாலமாக கறையாகி நிற்கும் ஒரு மஞ்சப்பைக்குள் ‘மரியாதையை’ நிரப்பியிருக்கிறார் அறிமுக இயக்குனர் ராகவன். ‘இவனுங்க பண்றதையெல்லாம் எங்க தாத்தன் பார்க்கணும்…’ என்று எங்காவது அபார்ட்மென்ட்டில் யாராவது பேசியிருக்க வேண்டும். அதுதான் இந்த கதையின் பிரசவ வார்டு. வெல்….(க) ராகவன்!

சிறு வயதிலேயே தாய் தந்தையை இழக்கும் விமலை, தாத்தா ராஜ்கிரண்தான் வளர்க்கிறார். ஒரு வார்த்தை கூட கோபப்படாமல் பேரனை வளர்க்கும் தாத்தாவை மூன்று மாதங்களுக்கு மட்டும் தன்னோடு தங்க வைத்துக் கொள்ளும் ஆசையோடு சென்னைக்கு அழைக்கிறார் வாலிப விமல். (25 வருஷ பிளாஷ்பேக்கை வினாடியில் ஃபார்ஸ்ட் பார்வேடு செய்த அந்த நல்ல எடிட்டருக்கு நமஸ்காரம்) அதற்கப்புறம் விமல் அமெரிக்கா செல்வதாக திட்டம். அபார்ட்மென்ட் வாழ்க்கை, அக்கம் பக்கத்தார்களின் பாராமுகம், சிட்டி மனிதர்களின் சீப்பான புத்தி எல்லாவற்றுக்கும் ராஜ்கிரண் தனக்கேயுரிய வில்லேஜ் பாணியில் ரீயாக்ட் செய்ய, விமலின் அமெரிக்க கனவில் கல்! மற்றும் காதல் வாழ்விலும் கல்! ‘போய்யா… அவ்வளவும் உன்னாலதான். என் கண் முன்னால நிற்காதே’ என்று பேரன் கோபப்பட, தாத்தா என்னாகிறார் என்பது க்ளைமாக்ஸ்.

படம் துவங்கி பத்தாவது நிமிடத்திலேயே விமல், லட்சுமிமேனன் லவ்வை இன்னும் இழுப்பாங்களோ… என்று பதற வைக்கிறார்கள். நல்லவேளையாக தாத்தா ராஜ்கிரண் என்ட்ரி. அங்கு சூடு பிடிக்கிற கதை அதற்கப்புறம் க்ளைமாக்ஸ் வரைக்கும் பர பரவாகி படத்தையே உயர்த்தி பிடிக்கிறது. ஒரே பாடலுக்குள் தாத்தாவின் இன்னொசன்ட் அமர்க்களங்களை சொல்லிவிட்டாலும், அதற்கப்புறமும் தொடரும் அவரது அதிரடிகள் அசத்தலோ அசத்தல்! பஸ் ஸ்டான்டில் ஒரு பெண் ஆபாசமாக டிரஸ் போட்டுக் கொண்டு நிற்க, அதை கண்களால் மேயும் ஒருவனை நைய புடைக்கிறார் தாத்தா. ஒரு ஆட்டோவை பிடித்து அவளையும் ஏற்றிக் கொண்டு அவள் வீட்டுக்கே போகும் அவர், ‘உங்கப்பாவை கூப்பிடும்மா’ என்று கூற, கம்பீரமாக வருகிறார் ஒரு போலீஸ் அதிகாரி. ‘பளார்…’ அவரது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடுகிறார் தாத்தா. ‘புள்ளைய இப்படியா சட்டை போட அனுமதிப்பே?’ என்று கேட்டுவிட்டு கம்பீரமாக அவர் வெளியேறும்போது, கைதட்டாத கையெல்லாம் ஒரு கையா?

ராஜ்கிரண் ஒரு ஆட்டோக்காரரிடம், அந்த கட்டிடத்தை கட்டுனது யாருப்பா? என்பன போன்ற பிரமிப்பான கேள்விகளான கேட்கிறார். அந்த ஆட்டோக்காரரும் ‘ஐடோன்ட்நோ’ என்று சொல்லிக் கொண்டே வருகிறார். அந்த நேரம் பார்த்து சாலையோரத்தில் ஒரு டெட் பாடி போகிறது. ‘அது யாருப்பா?’ என்று இவர் கேட்க, அதற்கும் ‘ஐடோனோ’ என்கிறார் அவர். பொசுக்கென்று ஆட்டோவிலிருந்து இறங்கும் ராஜ்கிரண், ‘அவ்ளோ பெரிய மனுஷனான இந்த ஐடோனோவ இப்படி அநாதை மாதிரி அடக்கம் பண்ண போறீயே?’ என்று அங்கேயும் அவரது மகனுக்கு ஒரு பளார் விட, ஜிலீர் ஆகிறது தியேட்டர். பெரிய அதிரடியே விமலின் லேப் டாப்பை அவர் டோஸ்ட்டர் என்று நினைத்து அடுப்பில் வைத்து அம்போவாக்குவதுதான்.

இப்படி ஒரு புறம் கலகலவென கலக்கிக் கொண்டிருக்கும் ராஜ்கிரண், அதற்கப்புறம் தன்னாலேயே தனது பேரனுக்கு வேலை போச்சு, கனவு போச்சு என்பதை அறிந்ததும் நிலைகுலைந்து போவது அழுத்தமான திருப்பம். அவ்வளவு நிலைகுலைந்த நிலையிலும் தன்னை அறியாமல் அனிச்சை செயலாக அந்த சிறுமிக்கு வைத்தியம் பார்க்கிற வலிமைதான் கிராமத்து யதார்த்தம் என்பதை பொட்டில் அடித்த மாதிரி சொல்லிவிடுகிறார் டைரக்டர்.

ராஜ்கிரண் புராணம் போதும். விமல்- லட்சுமிமேனன் எபிசோடுக்கு வாங்க என்கிறீர்களா? அதுதான் இந்த படத்தின் ஆகப்பெரிய அநீதி. தாத்தாவுக்காக காட்சிகளை செதுக்கிய இயக்குனர், லவ்வர்ஸ் விஷயத்தில் விட்டேத்தியாக பேனா பிடித்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது. அதுவும் குளோஸ் அப் காட்சிகளில் லட்சுமிமேனன் ஐயனார் கோவில் பூசாரி போல அப்படியொரு திரில் எபெக்ட்டில் தெரிகிறார். ரசிகர் மன்றங்கள் கலைக்கப்பட்டால், அதற்கு மஞ்சப்பை பெரிய காரணமாக இருக்கக் கூடும்.

நல்லவேளை… விமல் அமெரிக்காவுக்கெல்லாம் போகிறார் என்பதற்காக அவரை நாலு வார்த்தை இங்கிலீஷில் பேச வைக்காமல் விட்டார் டைரக்டர். நாமல்ல… விமலே டைரக்டருக்கு தனியாக நன்றி சொல்லியிருப்பார்.

மாசாணியின் ஒளிப்பதிவில் ஆரம்ப சில காட்சிகள் என்னவோ போல இருந்தாலும், அதற்கப்புறம் ஒட்டிக் கொள்கிறது. ரகுநந்தனின் இசையில் எல்லா பாடல்களும் இனிமை. சில பாடல்களில் இளையராஜாவின் பழைய ஹிட் பாடல்களை லேசாக களவாடியிருக்கிறார். மன்னிப்போம். இன்று பாதி பேருக்கு அதுதானே பிழைப்பு? பின்னணி இசையிலும் பரவசப்படுத்துகிறார் ரகு.

தாத்தா சொத்து பேரனுக்கு என்கிறது சட்டம். ராஜ்கிரண் என்கிற தாத்தாவால் பிழைத்துக் கொள்கிறது பேரன் விமலின் மார்க்கெட்!

மஞ்சப்பை- பையும் அழகு! பைக்குள்ளிருக்கும் பண்டமும் ருசி!

-ஆர்.எஸ்.அந்தணன்

1 Comment
  1. Rajeshkumar says

    Super

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
சிரிப்பா சிரிக்குது கருத்து சுதந்திரம்?

ஈழ தமிழர்களை அவமதிக்கும் ‘இனம்’ படத்தை தடை செய்ய வேண்டும் என்று குரல் எழுந்தபோது, கோடம்பாக்கத்தில் லிங்குசாமிக்கு பிரியமான சில இயக்குனர்கள் பொங்கியெழுந்துவிட்டார்கள். ஒரு படைப்பாளியின் கருத்து...

Close