ஒரு ஊர்ல ரெண்டு ராஜா- விமர்சனம்

முப்பது நாளில் ஷங்கராவது எப்படி? இருவத்தியெட்டு நாளில் முருகதாஸ் ஆவது எப்படி? என்று திடீர் கோதாவில் குதித்தால் என்ன வருமோ, அதுதான் ஒ.ஊ.ரெ.ராஜா! சட்டியில நெருப்பை போட்டுட்டு, அடுப்புல அரிசிய போட்ட மாதிரி தத்துப்பித்து சமையல்! கொத்து கொத்தா இருமல்! தமிழ் சமூகத்தின் இன்றியமையாத பிரச்சனைகளை தங்கள் படங்களில் நுழைக்கும் ‘வளக்கம்’ சமீபகாலமாக அதிகரித்திருப்பது ஒருவகையில் நல்லதுதான். அதற்காக இரும்பு ஆலையில இது நடக்குது, கரும்பு ஆலையில அது நடக்குதுன்னு காட்டுனா, ஆலைக்கு சம்பந்தமில்லாத ஆளுங்க, ‘அட போலே… போ…’ என்று சொல்லிவிட்டு போகும் அபாயம் இருக்கிறதே அண்ணாச்சி?

தோழி விசாகாவின் ஊருக்கு மருத்துவ கேம்ப்புக்காக செல்லும் ப்ரியா ஆனந்த் அங்கிருக்கும் இரும்பு ஆலை ஒன்றில் நடக்கும் அநியாயத்தை தட்டிக் கேட்கிறார். அதோடு விட்டாரா? திடீர் டிராபிக் ராம‘மாமி’யாகி ஆலை நிர்வாகத்தின் மீது வழக்கு போடுகிறார். நாளைக்கு வழக்கு. இன்று கோர்ட்டுக்கு செல்கிற அவரை குறுக்கே மறித்து கொத்து பரோட்டா போட துரத்துகிறது ஒரு கும்பல். ஒரு ரயில் பயணத்தில் ப்ரியாவை சந்திக்கும் விமலும், அவரது நண்பர் சூரியும் இணைந்து ப்ரியாவை காப்பாற்றியது எப்படி? ஆலை நிர்வாகிக்கு புத்தி வந்ததா? இதெல்லாம்தான் க்ளைமாக்ஸ்.

பாடி கட்டாத லாரியில் பஞ்சு மூட்டையை ஏற்றிய மாதிரி, ஒரு வாகு வழியில்லாமல் டிராவல் ஆகிறது கதை. சூரிக்கு வரும் திடீர் லவ்வை சேர்த்து வைக்க ரயில்வே ஸ்டேஷனுக்கு வருகிறார் விமல். வந்த இடத்தில் சும்மாயில்லாமல் அந்த சூரியாயிணி மனசை விமல் காலி பண்ண, அவர் பாதியிலேயே எஸ்கேப். ‘அப்புறம் எதுக்கு இவங்க ரயில்ல டிராவல் பண்ணணும்?’ என்கிற கேள்வியெல்லாம் கேட்காமல் படம் பார்ப்பது முக்கியம். அதுவும் சூரி, தமிழ் தெரியாத அந்த இந்திக்கார போலீசிடம் அடிக்கும் ஜோக்குகள் எதுவும் மருத்துக்கு கூட நம்மை ‘ஷேக்’ பண்ணலையே சாமீ. (ஒரு இடத்தில் மட்டும் குபீர். வந்துட்டாண்டா மாறு வேஷம் போட்ட மனோபாலா) நல்லவேளை… நடுநடுவே விமல் சூரி காம்பினேஷன் களைகட்டுவதால் தப்பித்தோம்.

அதுவும் வண்டி திருமங்கலத்துல நிக்கும். அது நிக்கறதுக்கு முன்னாடி இறங்கி ஓடி எதிர் திசையில் இருக்கும் டாஸ்மாக்குல சரக்கு வாங்கிட்டு வந்து ஏறிக்கலாம் என்று விமல் ஓட, விமலை முந்திக்கொண்டு ப்ரியா ஆனந்த் ஓடி டாஸ்மாக்கில் சரக்கு வாங்குகிற காட்சி அல்டிமேட். அதற்கப்புறம் அவரை வேறு மாதிரியே டீல் பண்ணுகிற இருவரும் ஒரு கட்டத்தில் அவர் டாக்டர் என்று அறிய… அப்புறம் விமலும் ப்ரியாவும் பாடும் எந்த டூயட்டும் ‘ஒத்துக்கல’ பாஸ். சமயங்களில் அழகாகவும், சமயங்களில் சங்கடமாகவும் இருக்கிறார் ப்ரியா ஆனந்த். அவரது இடுப்புக்கு மட்டும் தனியாக மோட்டார் வைத்து படைத்த ஆண்டவனின் படைப்புக்கு அநேக நமஸ்காரங்கள். வாழ்க டான்ஸ் மாஸ்டர்.

ஒரு ஹீரோவுக்குரிய எந்த இலக்கணங்களையும் விமலுக்கு வைக்கவில்லை டைரக்டர் கே.கண்ணன். என்னதான் கொழுத்த ஃபைட் மாஸ்டர் துரத்தினாலும் ஒரு ஹீரோ இப்படியா எலி மாதிரி ஓடிப் பதுங்குவது? கமர்ஷியல் கதையில் யதார்த்தம் எதுக்குங்க பாஸ்? கிடைத்த கொஞ்ச நஞ்ச கேப்பையும் சூரிக்கு விட்டுக் கொடுத்துவிட்டு விமல் ‘தேமே’ என்று நிற்கிறார். விமல் என்கிற ஜனங்களின் கலைஞன், விழித்துக் கொள்ள வேண்டிய நேரமிது. இரைச்சலே சிரிப்பு என்று சமீபகாலமாக நம்பி வரும் சூரி, தன் எண்ணத்தை மாற்றிக் கொள்வது எமர்ஜென்ஸி கால அவசரம்.

ஒரு ஆடி காரில் வந்து லிஃப்ட் கொடுக்கும் தம்பி ராமய்யா, முதன் முறையாக ‘ஏண்ணே இப்படி பண்றீங்களேண்ணே…’ ஆக்குகிறார் நம்மை. வட்டார பாஷையில் ஒரு கலக்கு கலக்கி, அதைவிட தன் கெட்டப்பில் இன்னும் கலக்கி ஏராளமாக ரசிக்க வைக்கிறார் நாசர். இவருக்கு ஜோடி அனுபமா குமார். (ஒரு குளோஸ் அப் வைக்க முடியுதா ஆன்ட்டி உங்களுக்கு?)

இரண்டு பாடல் காட்சிகளில் அசரடிக்கிறார்கள். விசாகாவும் ப்ரியா ஆனந்தும் பாடும் அந்த மழைப்பாடல் அழகோ அழகு. அதுவும் நமக்கு குளிரடிக்கிற அளவுக்கு. அப்புறம் இனியா அந்த லாரியில் போடும் குத்தாட்டமும், அதற்கு இமான் போட்ட மெட்டும்! முக்கியமாக நடிகை லட்சுமிமேனனின் குரல். என்ன ஒரு ஈர்ப்பு அதில். அந்த நீண்ட ரயிலும், அது நகரும் அழகுமாக பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு விசேஷம். ஸ்டண்ட் சிவாவை வைத்துக் கொண்டு இவ்வளவு மொக்கையான சண்டைக்காட்சிகளை எடுக்க தனியாக மெனக்கட்டால்தான் உண்டு.

இந்த படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் விஜயகாந்த் கட்சியின் அதிருப்தி கோஷ்டியாளர். படத்தின் இயக்குனரை நைசாக அனுப்பி வைத்தது கேப்டனின் வேலையாக இருக்குமோ?

-ஆர்.எஸ்.அந்தணன்

Leave A Reply

Your email address will not be published.

Read previous post:
இனிமேதான் என் ஆட்டம் ஆரம்பம்! விஷால் குமுறல்… நடிகர் சங்கமும் நாய் விவகாரமும்!

‘நான் வருவேண்டா’ என்று எந்த நேரத்தில் ‘பூஜை’ ட்ரெய்லரில் குமுற ஆரம்பித்தாரோ? அப்போதிலிருந்து அதே வார்த்தையை வெவ்வெறு காரணங்களுக்காக குமுற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார் விஷால். சும்மா...

Close