ஒருத்தரும் பொண்ணு தர மாட்டேங்குறாங்க! பார்ட்டி பாய் பிரேம்ஜி வேதனை!
கழுவி கழுவி ஊற்றினாலும், கவலைப்படாத மனசுக்கு சொந்தக்காரர் பிரேம்ஜி அண் பிரதர்ஸ்தான்! “நாங்க ஜாலியா இருக்கோம். உங்களுக்கு ஏன்யா உறுத்துது?” என்று கேட்கிற ரகம் இவர்கள் என்பதால்தான் இப்படியொரு யோக நிலை! அண்ணனிருக்க பயம் ஏன் என்று வெங்கட் பிரபுவின் எல்லா படங்களிலும் முக்கிய ரோலில் நடித்துத்தள்ளும் பிரேம்ஜி, மீண்டும் அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்க, ‘பிரேம்ஜியை கிட்ட சேர்க்காதீங்க’ என்று கோர்ட்டுக்கு போனாலும், கேட்பதாக இல்லை வெங்கட் பிரபு. சரி அந்த கதை இருக்கட்டும்…. குறுக்கால இன்னொரு விஷயம் இருக்கு.
பிரேம்ஜியே ஸோலோ ஹீரோவாக (?) நடிக்கும் மாங்கா திரைப்படம் இந்த மாதம் திரைக்கு வருகிறது. இதில் இரு வேடங்களில் நடிக்கிறாராம் அவர். ஒரு விஞ்ஞானி. இன்னொருவர் அந்த காலத்து பாகவதர் ஜெமினி கெட்டப்பில் திரியும் சோக்காலி. காதல், மோதல், கண்ணீர், சிரிப்பு, சென்ட்டிமென்ட் என்று எல்லாம் கலந்து கட்டிய படமாம் இது. மாங்காவுக்கு இசை பிரேம்ஜியேதான். என்னோட லட்சியம் ஒரு நல்ல மியூசிக் டைரக்டர் ஆகணும்ங்கறது. அப்படியே நடிப்பு சைட்ல வரும். அவ்வளவுதான் என்றார்.
அத்வைதா, லீமான்னு ரெண்டு பிரேம்ஜிக்கும் ரெண்டு ஹீரோயின்கள் வேறு.
“உங்களை பார்ட்டி பாய்னு ஊர் சொல்லுது. இதை நினைச்சு ஃபீல் பண்ணுறீங்களா? இல்ல ஸ்போர்ட்டிவா எடுத்துக்குறீங்களா?” என்று பிரேம்ஜியை கேட்டால், எதற்கும் அலட்டிக் கொள்வதாக தெரியவில்லை மனுஷன். “அப்படி கூப்பிடுறதுல சந்தோஷம்தான் சார். என் லட்சியம் சந்தோஷமா இருக்கறதுதான். இதோ- இப்ப கூட இங்கேயிருந்து நேரா பார்ட்டிக்குதான் போறேன். என்ன ஒண்ணு? ஒருத்தரும் பொண்ணு தர மாட்டேங்குறாங்க. பத்திரிகைகள் இதைப் பற்றியே எழுதியதால் வந்த விளைவு. இருந்தாலும் வீட்ல அண்ணன் சிவியரா எனக்கு பொண்ணு பார்த்துகிட்டு இருக்காரு” என்றார் சற்றே கவலையுடன்.
முன்னெல்லாம் பேஃபுக், இன்டர்நெட்ல நல்லா திட்டுவாங்க. ஒரு கட்டத்துல அதுவே பழகிப் போச்சு. யாரும் திட்டினா எனக்கு கோவமே வர்றதில்ல என்று பிரேம்ஜி கூறுவதை கேட்க பாவமாக இருந்தது. ஒரு மனுஷன் ‘ஜின்’ நிலையிலேர்ந்து ‘ஜென்’ நிலைக்கு போனால்தான் இப்படி எல்லாத்தையும் டேக் இட் ஈஸியா எடுத்துக்க முடியும்!
ஹ்ம்ம்ம்ம்… பிரேம்ஜி, பிரேம்ஜி!