இருப்பதிலேயே பெரிய கஷ்டம் இதுதான்! தெலுங்கு லிங்கா பட விழாவில் ரஜினி பேச்சு!

ஐதராபாத்தில் ரஜினியின் ‘லிங்கா’ பட தெலுங்கு பதிப்பு பாடல் வெளியீட்டின் வெற்றிவிழா தி பார்க் ஓட்டலில் நடந்தது. படம் சம்பந்தப்பட்ட முக்கியமான கலைஞர்கள் மேடையில் இருக்க, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மட்டும் படத்தின் கடைசி நேர மெனக்கடலில் இருப்பதால் விழாவுக்கு வரவில்லை என்றார்கள். வழக்கம் போல ரஜினியின் பேச்சில் ஏகத்திற்கும் சுவாரஸ்யம். சென்னையில் நடைபெற்ற விழாவில் அவரை அரசியல் பேச துண்டிய மாதிரியான ஆட்கள் யாரும், அங்கு வரவில்லை என்பதால் படத்தை பற்றி நிறைய விஷயங்களை பகிர்ந்து கொண்டார் ரஜினி. குறிப்பாக கதை திருட்டு பற்றி எழும் சர்ச்சைகள் குறித்தும், எந்திரன் 2 ல் ரஜினி என்று ஊர் உலகமே வாய் பிளந்தபடி கதைத்துக் கொண்டிருக்கும் போது, இன்னும் என்னோட அடுத்த படத்தின் கதை முடிவாகல என்று கூறியும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

விழாவில் ரஜினி பேசியதாவது-

புயலால பாதிக்கப்பட்ட விசாகப்பட்டினம் மக்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். சிலநாளுக்கு முன்னாடி நடந்த நிவாரண நிதியுதவி நிகழ்ச்சிக்கு என்னால வரமுடியலை. அப்ப எங்க குடும்பத்துல நடந்த ஒரு முக்கிய நிகழ்ச்சியால வரமுடியாமப் போயிடுச்சி. அதுக்காக நீங்க எல்லாரும் என்னை மன்னிக்கணும். சென்னைக்குப் போனபிறகு பாதிக்கப்பட்ட மக்களுக்காக என்னோட நிதியுதவியை வழங்கறேன்.

சுமார் நான்கு வருடங்கள் கழிச்சி நான் நடிச்சிருக்கிற ‘லிங்கா’ படம் வெளிவரப் போகுது. நடுவுலவந்த ‘கோச்சடையான்’ படம்அனிமேட்டட்படம், நேரடியாநான்நடிச்சிவர்றபடம் ‘லிங்கா’. ஒருஆறுமாசத்துக்குள்ள இந்தமாதிரியான ஒரு மிகப்பெரியபடத்தைக் கொடுக்கிறது நடக்கமுடியாத ஒரு விஷயம். பெரிய நட்சத்திரங்கள், மிகப்பெரிய டெக்னீஷயன்கள் பங்குபெற்றிருக்கிற படம்கற அர்த்தம் இல்லை.இந்தப் படத்தோட கதைபெருசு, இந்தப் படத்தோட பின்னணி பெருசு. சுதந்திரத்துக்கு முன்னாடி நாற்பதுகள்ல நடக்கிறகதை.

ஒரு மிகப்பெரிய அணை கட்டறத பத்தின கதை, டிரெயின் சண்டைக்காட்சிகள், யானைகள், குதிரைகள், அறுபது, எழுபது சீன் படத்துல இருந்தால், அதுல நாற்பது சீன்ல ஆயிரம் பேராவது நடிச்சிருப்பாங்க. இவ்வளவு கஷ்டத்தோட குறிப்பிட்ட காலத்துக்குள்ள இந்தப்படத்தை முடிச்சிருக்கோம்னா இயக்குனர் ரவிக்குமார், அவரோட யூனிட் மற்றும் தயரிப்பாளர் ஆகியோர்தான் காரணம். அதுக்கு நடிகர்கள் காரணம் இல்லை. ஏன்னா, நாங்க கடைசில வந்து ஷுட்டிங் முடிஞ்சதும் சீக்கிரம் போயிடுவோம். ஆனால், டெக்னீஷியன்ஸ்தான் ரொம்பகஷ்டப்பட்டாங்க. இந்தப்படத்துல மூணுஆச்சரியங்கள் இருக்கு. முதல் ஆச்சரியம் டெக்னீஷியன்கள். ஏ.ஆர்.ரகுமான், ரத்தினவேலு, சாபுசிரில், அனுஷ்கா, சோனாக்ஷி, அவ்வளவு பேருமே ரொம்ப பிசியனாவங்க. அதுபடம் பார்க்கும்போது உங்களுக்குத்தெரியும்.

இரண்டாவது ஆச்சரியம். இந்தப்படத்தோட கதை என்னோடதுன்னு சிலபேர் வழக்குபோட்டிருக்காங்க. டிவிட்டர்ல ஒண்ணு படிச்சேன். ரஜினி படத்துல கதை இருக்கா? அப்படி அவரோட படத்துல கதை இருந்தால் அதை நாலு பேரு அவங்க கதைன்னு சொன்னாங்கன்னா, நான்போய் அந்தப்படத்தை முதல்ல பார்க்கிறன்னு ஒருத்தர் எழுதியிருந்தாரு. உண்மையிலேயே இந்தப் படத்துல மிகச்சிறப்பான கதை இருக்கு. அந்த நாலு பேரோட கதை இல்லை இது. இந்தப் படத்தோட கதை பொன்குமரனுடையது. எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச கதை. இதை மாதிரி ஒருகதையில நான் நடிச்சது எனக்குக் கிடைச்ச பாக்கியம்.

மூணாவது ஆச்சரியம் என்னன்னா… நான் இந்தப் படத்துல ரொம்பக்கஷ்டப்பட்டு நடிச்சிருக்கேன். அதுவந்து சண்டைக்காட்சிகள்ல நடிச்சது கிடையாது. டிரெயின் சண்டை, கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி அதெல்லாம்கூட கிடையாது. இங்க இருக்கிற அனுஷ்கா, சோனாஷ்ஷி மாதிரியான பொண்ணுங்களோட டூயட் பாடினதுதான் அந்தக் கஷ்டம். சத்தியமா சொல்றேன், சோனாக்ஷி கூட டூயட் பாடினதுலாம் ரொம்பக்கஷ்டம். சின்னக்குழந்தையா இருக்கும்போது சோனாக்ஷியப் பார்த்த்து. என்மகள்கள் ஐஸ்வர்யா, சௌந்தர்யாகூட வளர்ந்தவங்க. அவங்ககூட டூயட் பாடணும்னு சொன்ன உடனே எனக்கு வேர்த்துக் கொட்டிடுச்சி. என் முதல் படம் ‘அபூர்வராகங்கள்’ படத்துல நடிச்சபோது கூட அந்த அளவுக்கு டென்ஷன் இருந்ததில்லை. கடவுள் நடிகர்களுக்கு ஏதாவது தண்டனை கொடுக்கணும்னு நினைச்சாருன்னா, அறுபது வயசுல நடிகர்களுக்கு டூயட் பாடற தண்டனையைக் கொடுக்கலாம்.

கேமராமேன் ரத்தினவேலுகூட வெளிப்படையா சொல்லியிருந்தாரு. நான்ரஜினிகாந்தை ரொம்பக்கஷ்டப்பட்டு இளமையாகாட்டியிருக்கன்னு சென்னையில நடந்த இசைவிழால சொன்னாரு. நான் சினிமாவுக்கு வந்து நாற்பது வருஷம் கிட்ட ஆகிடுச்சி. ஒருசீனியர் நடிகரா சினிமாவுக்கு என்ன தர்றீங்கன்னு கேட்டால், குறுகிய காலத்துல இந்தமாதிரி ஒருபடத்தைத் தயாரிச்சிக் கொடுத்திருக்கோம்னு சொல்வேன்.

ஹாலிவுட்ல கூட பெரிய பெரிய படங்கள் வருது. அங்கெல்லாம் ஒருபடம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி பல மாதங்கள் எடுத்துப்பாங்க. ஆனால், ஷுட்டிங் போயிட்டால் நாலஞ்சி மாசங்கள்ல அதை முடிச்சிடுவாங்க. அதை இங்கயும் சொல்லலாம். ஆனால், ‘பாகுபலி’ வேற மாதிரியான படம். அது இரண்டு பாகம் எடுக்கிற படம். அதை நான் பார்த்திருக்கேன். அது வேற படம். இயக்குனர் ராஜமௌலிக்கு என்னோட பாராட்டுக்கள். அவர் இந்தியாவின் நம்பர் ஒன் இயக்குனராவருவாரு. தெலுங்கு மக்கள் எல்லாருக்கும் அந்தப்படம் மிகப்பெரிய கௌரவம். நான் வெளிப்படையா சொல்றேன். ராஜமௌலி படத்துல நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைச்சால் நான் கண்டிப்பா நடிப்பேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு.

ரவிகுமார் இந்தப் படத்தை ரொம்ப அழகா எடுத்திருக்காரு. ரத்தினவேலு ரொம்ப சீக்கிரமா இந்தப்படத்தை எடுக்கக்காரணமா இருந்தாரு. அனுஷ்கா, சோனாக்ஷி, அப்புறம் ஜெகபதிபாபு. திரையுலகில இருக்கிற ஒரு ஜென்டில்மேன். அவரோட நட்பு வாழ்க்கை முழுவதும் தொடரணும்னு ஆசைப்படறேன்.

இந்தப்படம் உங்க எல்லாருக்கும் கண்டிப்பா பிடிக்கும். தமிழ் மக்கள் என்படத்தைப் பார்த்து எனக்கு எப்படி ஆதரவு தர்றாங்களோ, அதேமாதிரி தெலுங்குமக்களும் எனக்கு ஆதரவு தர்றாங்க. இந்தப் படத்துக்கும் அதேமாதிரி ஆதரவு தருவாங்கன்னு நம்புறேன். தயாரிப்பளார் அல்லு அரவிந்த், அடுத்தபடம் எப்பன்னு கேட்டாரு. கதை இன்னும் ரெடியாகலைன்னு சொன்னேன். முதல்ல சிரஞ்சீவிக்கு நல்ல கதையைக் கொடுங்க. ரொம்பநாளா அவர் காத்திட்டிருக்காரு.

இவ்வாறு அவர் பேசினார்.

– ஐதராபாத்திலிருந்து ஆர்.எஸ்.அந்தணன்

2 Comments
  1. Sivaprakasam says

    Super Star Rajini very good speech

  2. Ahmed Shah says

    Super Star Rajini in & as LINGAA. MASS HIT of 2014
    Vasool Mannan Rajini

Reply To Ahmed Shah
Cancel Reply

Your email address will not be published.

Read previous post:
YUVAN MUSICAL EXPRESS @ NELLAI JUNCTION

Yuvan Shankar Raja, the little maestro is all set to woo his audience this pongal with a musical concert. The...

Close