பூலோகம் வாங்குனாதான் ஐ! கத்திக்கு சிக்கல் தரும் தயாரிப்பாளர்
இனிமேல் படங்களை ரிலீஸ் பண்ணுகிற பொறுப்பையும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் கொடுத்தால்தான் நிம்மதியாக நடக்கும் போலிருக்கிறது. அந்தளவுக்கு குழி பறிக்கும் வேலைகள்… குப்புற தள்ளும் சோதனைகள்… என்று பெரிய ஹீரோக்கள் ‘அனுபவிக்கிறார்கள்’. அதுவும் விஜய் படங்கள் வரும்போது நடக்கிற அரசியல் இருக்கிறதே… அப்பப்பா! பிரசவ வார்டில் குறுக்கும் நெடுக்கும் அலையும் தகப்பன்களின் கதையாக தன் ஒவ்வொரு படத்தின் வெளியீட்டு சமயங்களில் குந்தாங்குறையாக குமுற வேண்டிய நிலை விஜய்க்கு.
இப்போதும் கத்திக்கு அப்படியொரு சோதனை வந்தது. நல்லவேளையாக அதிலிருந்து தப்பித்தோம் என்று கடந்த 7 ந் தேதி மாலை சுமார் ஐந்து மணியிலிருந்து சந்தோஷமாக இருந்தார் அவரும். ஆனால் இப்போது மீண்டும் கத்திக்கு சோதனை. இந்த முறை சோதனைக்கூடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்திருப்பவர் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன்.
பிரமாண்டம் என்ற வார்த்தைக்கு தமிழ்சினிமாவில் முதன் முதலில் அர்த்தம் கொடுத்தவர் அவர்தான். அந்த கவுரவத்தை காப்பாற்றிக் கொள்ளும் விதத்தில் 100 கோடிக்கும் மேல் செலவு செய்து ஐ படத்தை தயாரித்து வருகிறார். தீபாவளிக்கு வருவதாக முதலில் கூறப்பட்டாலும், இன்னும் பட வேலைகள் மிச்சமிருப்பதால் டிசம்பரோ? ஜனவரியோ? அதற்குள் தனது தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்த பூலோகம் படத்தை தீபாவளிக்கு கொண்டு வரலாம் என்று நினைத்திருக்கிறார். அங்குதான் சிக்கலே!
17 ந் தேதியே தியேட்டருக்கு வந்துவிட வேண்டும் என்று வேக வேகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது கத்தி. ஆனால் தொழில்நுட்ப வேலைகள் இன்னும் மீதமிருப்பதால், திட்டமிட்டபடி வருமா? அல்லது நேரடியாக தீபாவளி அன்றுதான் வருமா? தெரியாது. தீபாவளிக்கு நான்கு நாட்கள் முன்னரே வந்துவிட்டால் சிக்கல் இல்லை. அந்த நான்கு நாட்களும் எல்லா தியேட்டர்களிலும் கத்தி மட்டும்தான் ஓடும். அப்படி முடியாவிட்டால், கத்திக்கே நினைத்தளவுக்கு தியேட்டர் கிடைக்குமா? என்ற சந்தேகம் வந்திருக்கிறது.
இங்குதான் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தன் ‘கெத்’தை காட்டுகிறார். எப்படி? பூலோகம் படத்தை வாங்குறவங்களுக்குதான் ஐ. அப்படி வாங்காதவங்களுக்கு நிச்சயமா ஐ கிடையாது என்கிறாராம். தமிழ்நாட்டில் ஐ படத்திற்கு இருக்கிற எதிர்பார்ப்பை அணு அணுவாக உணர்ந்திருக்கிறார்கள் தியேட்டர்காரர்கள். ஐ க்காக எந்த படத்தை வேண்டுமானாலும் திரையிடவும் தயாராக இருக்கிறார்கள். இந்த கொக்கரிப்பு கூச்சலில் கத்தியை காவு கொடுத்துவிடுவார்கள் என்றே கிசுகிசுக்கிறார்கள்.
கத்தி பிழைக்க ஒரே வழி, 17 ந் தேதியே தியேட்டருக்கு வருவதுதான். மனுஷங்க செயல்படுகிற வேகத்தில் மிஷின்ங்களும் செயல்பட்டால் 17 ந் தேதி உறுதி. இல்லேன்னா…? கண்ல குருதிதான்!