அருகி வரும் நாகரீகம்… அலறி ஓடும் ஹீரோக்கள்!
முன்னணி ஹீரோ ஒருவரின் படங்கள் வெளியானால் அந்த ஹீரோவை சந்திப்பதும், அவரிடம் படம் தொடர்பான சுவாரஸ்யமான விஷயங்களை கேட்பதும் மீடியாவுக்கு பெரிய விஷயமல்ல. சம்பந்தப்பட்ட ஹீரோவும், ‘சந்திக்கலாமே’ என்று பேச முன்வருவார். படப்பிடிப்பில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்து கொள்வார். அதில் எழுத தகுதியானதை மட்டும் எழுதி வந்தார்கள் நிருபர்கள். ஆனால் சமீபகாலமாக அந்த இயல்பு கெட்டுப்போயிருக்கிறது. நடிகர்கள் மீடியாவை சந்திக்கவே அஞ்சுகிறார்கள். முன்பெல்லாம் அஜீத்தின் ஒவ்வொரு படங்கள் வெளியாகும்போதும் அவர் தவறாமல் மீடியாவை சந்தித்து வந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் அதுவே தொல்லையாகிவிட்டது.
நிருபர்கள் என்ற போர்வையில் உள்ளே வரும் சில அன் லிமிடெட் அன்பு ரசிகர்கள், அஜீத்தை கட்டிப்பிடித்து தங்களின் முதல் நாள் குவார்ட்டர் வாயுடன் முத்தமே கொடுத்துவிடுகிறார்கள். இதற்கெல்லாம் அஞ்சிதான் அவர் மீடியா பக்கமே வருவதில்லை. வருஷத்திற்கொருமுறையாவது கோவிலிலிருந்து உற்சவர் உலா வருகிறார். ஆனால் அஜீத்தின் பூட்டிய கதவு திறப்பதேயில்லை. ‘ஒரு நிருபர் ரசிகராக கூட இருக்கலாம். வரட்டும்… போட்டோ எடுத்துக் கொள்ளட்டும். அவருக்கும் ரசனை இருக்குமல்லவா? ஆனால் மாமன், மச்சான், எதிர்வீட்டுக்காரன் எல்லாரையும் அழைத்துக் கொண்டு வருகிறார்கள், அதனால்தான் அஜீத் இவர்களை சந்திப்பதேயில்லை’ என்கிறார்கள் அஜீத் தரப்பில்.
போகிற போக்கில் விஜய்யையும் அப்படியாக்கி விடுவார்கள் போலிருக்கிறது. நல்ல நேரத்திலேயே மேலுதடு அசைவது கீழுதடுக்கு கேட்காத மாதிரி பேசுவார் விஜய். சற்றே மூடி டைப்பான அவரையும் விடாமல் மொய்த்து இம்சை பண்ணிவிட்டார்கள் நேற்று திரண்ட அவரது ரசிகர்கள். கத்தி படத்தின் வெற்றிக்காக விஜய் தரவிருக்கும் ‘கெட் டு கெதர் ’ என்று வந்தது அழைப்பு. போனால் வாசலிலேயே நின்று நிருபர்களையும், அந்த போர்வையில் வந்த தன் ரசிகர்களையும் வரவேற்றார் விஜய்.
எப்படியும் பிரஸ்மீட் இல்லை. எந்த கேள்விக்கும் அவர் பதில் சொல்லவும் போவதில்லை. அப்புறம் என்ன சொல்லி இந்த சந்திப்பை நிறைவு செய்வார்கள் என்று ஆவலோடு காத்திருந்தால், அந்த தருணம் அடுத்த சில நிமிஷங்களிலேயே வந்தது. ‘ விஜய் சாருடன் போட்டோ எடுக்கிறவங்க எடுத்துக்கலாம்’ என்று கூறியதுதான் தாமதம். விழுந்தடித்துக் கொண்டு ஓடினார்கள் சில அப்ரசன்டுகள்.
இப்போதுதான் இன்னொரு கொடுமையான ஸ்டைலும் வந்திருக்கிறதே, செல்ஃபீ! அந்த ஃபீயை விஜய் மீது காட்டினார்கள் பாதி பேர். சிரித்தும் சிரிக்காமலும் நின்று போஸ் கொடுத்த விஜய், அப்ரசண்டுகளின் அதிகப்படியான ‘டச்சிங் டச்சிங்’ காரணமாக நடுவிலேயே வணக்கம் போட்டு விட்டு எஸ்கேப்!
எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மூத்த நிருபர்கள் சிலர், ‘ஹ்ம்ம்ம்… இப்படிதான் போகுது பொளப்பு’ என்று நொந்துகொண்டே திரும்பியது தனிக்கதை!