கூப்பிடு தொலைவில் கோடம்பாக்கம் – 18 ஆர்.எஸ்.அந்தணன் இலைநிறைய மட்டன் எலும்பு வேணும்… – ஆசைப்பட்ட சேரன்
சேரனிடம் உதவி இயக்குனராக இருந்த ஜெயந்தனுக்கு வந்த கண்டம் பற்றிதான் கடந்த எபிசோடில் ஆரம்பித்து நிறுத்தியிருந்தேன். பொக்கிஷம் படப்பிடிப்பின் போது அவருக்கு நிகழ்ந்த சம்பவங்களை சொன்னால், ஒரு உதவி இயக்குனரின் எல்லாவித பரிமாணத்தையும் புரிந்து கொள்ள முடியும்.
இந்த படத்தின் முதுகெலும்பே சேரன் பத்மப்ரியாவுக்கு இடையேயான கடிதப் போக்குவரத்துதான். கொல்கத்தாவின் தலைமை அஞ்சலகத்தில் படம் எடுக்க பர்மிஷன் கிடைக்கவில்லையென்றால் அவ்வளவு து£ரம் போனதற்கு அர்த்தமே இல்லை. ஆனால் அங்கு நடந்த அந்த சம்பவம் இருக்கிறதே, அது அத்தனை பேரையும் ‘பேக்கப்’ செய்திருக்கும் சென்னைக்கு.
கொல்கத்தாவில் எந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றாலும் அங்குள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்தான் அனுமதி கடிதம் வாங்கவேண்டும். ஜெயந்தனும் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட அதிகாரியை சந்தித்தார். அவரது பாக்கெட்டில் அந்த அதிகாரிக்கு தருவதற்காக தயாராக கவரிடப்பட்ட ஐயாயிரம் ரூபாய் பத்திரமாக இருந்தது.
அவரிடம், தமிழ் நாட்டிலிருந்து படம் எடுக்க வந்திருக்கிறோம் என்பதை கூறியவர், இதற்கு முன்பு எத்தனை படங்கள் எடுத்திருக்கிறோம். எத்தனை முறை மாநில அரசின் விருதுகளை வாங்கியிருக்கிறார் இந்த இயக்குனர் என்பதையெல்லாம் ஒரு பயோ-டேட்டாவாக தயார் செய்து எடுத்து சென்றிருந்தார் ஜெயந்தன். அதையெல்லாம் அதிகாரியின் டேபிளில் பவ்யமாக வைத்தார். அவர் படித்துவிட்டு இவர் பக்கம் திரும்பியதும், கையில் இருந்த லஞ்சக் கவரை மெதுவாக அவர் டேபிளின் ஓரத்தில் வைக்க, எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அதையும் ஒரு பயோ-டேட்டா கவரோ என்ற நினைப்புடன் பிரிக்க ஆரம்பித்தார் அதிகாரி. உள்ளே பணம் இருப்பதை பார்த்ததும் அவரது மீசை துடிக்காத குறை. கண்கள் சிவக்க ஜெயந்தனை பார்த்து ஆங்கிலத்தில் பொறிய ஆரம்பித்தார்.
பிறகுதான் புரிந்தது ஜெயந்தனுக்கு, அதிகாரி ஒரு கம்பீரமான கம்யூனிஸ்ட்வாதி என்பது. அவர் தன்னை கெட் அவுட் என்று சொல்வதற்குள் இடையே குறுக்கிட்டு ‘காம்ரேட்….’ என்றார் கம்பீரமாகவும் அன்பாகவும்! “நானும் உங்களை மாதிரிதான். ஒரு கம்யூனிஸ்ட்” என்றவர், மளமளவென்று தான் படித்த கம்யூனிசம் தொடர்பான புத்தகங்களை பற்றி பேச ஆரம்பித்தார். இறுதியாக “சார். இப்படியே எங்க ஊர்ல பழக்கிட்டாங்க. ஆனால் உங்க ஊர்ல இப்படியெல்லாம் இல்லை என்பதை பார்த்ததும் எனக்கு பெருமையா இருக்கு. ஐ சல்யூட் யூ காம்ரேட்” என்றார்.
சட்டென்று அந்த அறையில் ஏசி போட்ட மாதிரி குளிர்ந்தார் காம்ரேட் அதிகாரி. பிறகென்ன? அஞ்சல் அலுவலகத்தில் மூன்று நாட்கள் படம் எடுக்க பர்மிஷன் கிடைத்தால் போதும் என்று நினைத்த இவர்களுக்கு பத்து நாட்கள் பர்மிஷன் கொடுத்தார் அதிகாரி. இதுதான் ஒரு உதவி இயக்குனரின் சாமர்த்தியம்.
அங்கே கம்பீரமாக போலீஸ் அதிகாரியிடம் பேசிய அதே ஜெயந்தன் நாகூரில் பிச்சையெடுக்காத குறையாக அலையவும் நேரிட்டது. ஹ்ம்… இதுதான் உதவி இயக்குனர்களின் விதி.
பொக்கிஷம் படத்திற்காகதான் இந்த சந்திய சோதனையை அனுபவித்தார் அவர். சேரனும் அவரது அப்பாவும் பத்மப்ரியா வீட்டில் பெண் கேட்பதற்காக நாகூர் வருவார்கள். வந்தவர்களுக்கு ஆட்டுக்கறி பிரியாணி போட்டு விருந்து கொடுப்பது போல காட்சி. இலையில் நிறைய மட்டன் எலும்புகள் கிடக்க வேண்டும் என்று நினைத்தார் சேரன். இரண்டு இலை நிறைய மட்டன் எலும்பு திரட்டிகிட்டு வந்திருங்க என்று கட்டளையிட்டார் இதே ஜெயந்தனிடம்.
அங்குதான் வந்தது சோதனை. இவர்கள் போயிருந்த நேரத்தில்தான் மட்டன் விலை தாறுமாறாக ஏறியிருந்தது. யார் வீட்டுக்கு போனாலும் சிக்கன் எலும்புகள்தான் தேறின. டைரக்டர் கேட்டது மட்டன் எலும்பு. ‘சார் ஸ்கிரிப்ட்ல வேணும்னா சிக்கன்னு மாத்திக்கலாமா?’ என்று கேட்க முடியாது. கேட்டால் தெரியும் சங்கதி! வேறு வழியில்லாமல் அந்த மத்திம டவுனை சுற்றி சுற்றி வந்தார்கள் ஜெயந்தனும் மற்றொரு உதவி இயக்குனரும்.
ஒரு ஓட்டலில் இவர்கள் கேட்ட மட்டன் எலும்பு கிடைத்தது. ஆனால் முதலாளி கைகாட்டிய இடம், ஓரமாக வைக்கப்பட்டிருந்த எச்சில் தொட்டி. ‘தம்பி அதுல சாப்டுட்டு போட்ருப்பாங்க. நீங்களே கைய விட்டு எடுத்துக்கங்க’ என்றார் அவர். ஈகோவை கழற்றி ஓரமாக வைத்துவிட்டு தொட்டியில் கைவிட்டார்கள் இருவரும். நிறைய கிடைத்தது எலும்புகள். அப்படியே சேரனின் பாராட்டும்.
நாம் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தோம். இப்படி போய் எச்சில் தொட்டியில் கை விடுவதா என்று அவர் நினைத்திருந்தால், பொக்கிஷம் படத்திலிருந்து பாதியிலேயே வீட்டுக்கு வந்திருக்க வேண்டியதுதான்.
பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அன்புவின் அனுபவம் வேறொரு டைப்பான சுவாரஸ்யம். தாஜ்மஹால் படப்பிடிப்பு. கதாநாயகி ரியாசென் வேறொருவரை திருமணம் செய்து கொண்டு கண்ணீரோடு மாட்டு வண்டியில் பயணிப்பது போல காட்சி. கர்நாடக மாநிலத்தில் ஏதோ ஒரு அழகான பிரதேசத்தில் படமாக்கிக் கொண்டிருந்தார் பாரதிராஜா. குளோஸ் அப், மிட் ஷாட், லாங் ஷாட் என்ற வித விதமான கோணங்களில் படமாக்கிக் கொண்டேயிருந்தார்கள். சுமார் இரண்டு மணி நேரம் கழித்து ஒரு விஷயத்தை கண்டுபிடித்தார் அன்பு. புது மணப்பெண்ணான ரியாசென் கழுத்தில் அணிந்திருக்க வேண்டிய தாலி மிஸ்சிங்.
டைரக்டரிடம் சொன்னால் இவ்வளவு நேரம் என்னய்யா பண்ணிட்டு இருந்தீங்க என்று அடி விழுந்தாலும் விழும். ஏனென்றால் இந்த தவறுக்கு பொறுப்பு கன்ட்டினியுடி பார்க்க வேண்டிய உதவி இயக்குனர்தான். அவ்வளவு பதற்றத்திலும், நைசாக ஒரு காரியம் செய்தார் அன்பு. ஒளிப்பதிவாளர் கண்ணனின் காதருகே போய் விஷயத்தை சொன்னார். முதலில் திடுக்கிட்ட அவர், அந்த ஷாட் முடிகிற வரைக்கும் காத்திருந்தார்.
பிறகு மெல்ல பாரதிராஜாவிடம் போய், அந்த பொண்ணு மாலையை கழட்டுற மாதிரி ஒரு ஷாட் எடுத்துரலாமே என்றார். ‘ம்ம்ம்.. சரிய்யா’ என்றார் அவரும். அந்த இடைவெளியில் ஒரு தாலியை அவசரம் அவசரமாக ரியா கழுத்தில் மாட்டினார்கள். அதையும் ஜாக்கெட்டுக்குள் பதுங்கியிருப்பது மாதிரி மாட்டினார்கள். மாலையை கழற்றும்போது ஜாக்கெட்டுக்குள்ளிருந்து அந்த தாலி வெளியே வருவது போலவும் ஒரு ஷாட் எடுத்தார் கண்ணன். இதுபோன்ற இக்கட்டான நேரங்களில் ஒளிப்பதிவாளரிடம் சரண் அடைந்துவிட்டால் அவர் பார்த்துக் கொள்வார் என்பதும் ஒரு யுக்தி.
இப்படி ஒவ்வொன்றையும் ஆரம்பித்தால் எல்லா திரைப்படத்திலிருந்தும் ஏராளமான காட்சிகள் தேறும் என்பதால் அடுத்த பகுதிக்கு போவோமோ?
எச்சரிக்கை – இந்த கட்டுரையும் இனி வரப்போகும் கட்டுரையின் சாராம்சங்களும் தமிழ்சினிமா கலைஞர்களிடமிருந்து திரட்டப்பட்டவையே. இதில் ஏதேனும் திருத்தங்கள் மற்றும் கருத்து மாறுபாடுகள் இருப்பின் anthananpro@gmail.com ல் தெரிவிக்கவும். ஏற்புடையதெனில் திருத்திக் கொள்கிறேன். நன்றி
எச்சரிக்கை 2 – இந்த கட்டுரையை என் அனுமதியின்றி யாரும் மறு பிரசுரம் செய்யவோ, வெளியிடவோ அனுமதியில்லை.
என்ன அந்து,
இந்த தொடரும் அரோகரா தானா?
அந்த தொடர் புத்தகமாக வெளிவரவிருப்பதால், மீதியை புத்தக வடிவில் காண்க. நன்றி அன்புடன் அந்தணன்